PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM

'இனியும் அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது; அதிரடியில் இறங்கிவிட வேண்டியது தான்...' என, ஆவேசத்துடன் கூறுகிறார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
மம்தா என்றாலே, அதிரடிதான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தை, திரிணமுல் காங்கிரஸ் கோட்டையாக மாற்றியவர், மம்தா.
இப்போது, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேடிப்பிடிக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதே, அந்த கட்சியினருக்கு பெரிய விஷயமாக உள்ளது.
சமீப காலமாக மம்தா மிகவும் அடக்கி வாசிக்கிறார்; அதிரடி அரசியலை கைவிட்டு, அமைதியை பின்பற்றி வருகிறார். சமீபத்தில் அவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டன் நகருக்கு சென்றிருந்தார்.
அங்கு பிரபலமான ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்த சில இந்திய மாணவர்கள் எழுந்து, மம்தாவுக்கு எதிராக கோஷமிட்டனர். கையில், மம்தாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை வைத்திருந்தனர்.
விசாரித்தபோது, அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி ஆதரவாளர்கள் என தெரிந்தது. இதனால், ஆவேசமடைந்த மம்தா, 'இவர்களை மேற்கு வங்கத்தில்இருந்து விரட்டி அடித்தாலும், வெளிநாட்டிலும் வந்து தொல்லை கொடுக்கின்றனர்; இதற்கு விரைவில் ஒரு முடிவு கட்டுவேன்...' என, ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார்.

