
'நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் இப்படித் தான் நடக்கும்...' என, ஆந்திரா துணை முதல்வரும், பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், அந்த மாநில மக்கள்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பா.ஜ., மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடக்கிறது. தெலுங்கு திரைப்பட உலகின் அதிரடி ஹீரோவான பவன் கல்யாண், அரசியலுக்கு வந்து, துணை முதல்வரான பின்னும், தன் அதிரடியை கைவிடவில்லை.
துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களில் ஏறி, அவற்றில் போதை பொருட்கள் உள்ளனவா என சோதனை செய்வது, அதிகாரிகளிடம் தடாலடியாக பேசுவது என, சினிமாவில் நடிப்பது போலவே நிஜ வாழ்விலும் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், பவன் கல்யாண் கட்சியினர், அவருக்கு மிகப் பெரிய வாளை பரிசாக கொடுத்தனர். அதை வாங்கிய பவன் கல்யாண், சினிமாவில் வில்லனிடம் சண்டை போடுவது போல் சுழற்றினார்.
அந்த வாள், பவன் கல்யாணின் பின்புறம் நின்றிருந்த, அவரது பாதுகாவலரின் மூக்கின் அருகே சென்றது. நல்ல வேளையாக, பாதுகாவலர் விலகியதால், அவரது மூக்கு தப்பியது. ஆனால், இது பற்றி எந்த கவலையும் இல்லாமல், பவன் கல்யாண், நிகழ்ச்சியை தொடர்ந்தார்.
இது தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியானதை பார்த்த ஆந்திர மக்கள், 'நடிகர்கள், அரசியல்வாதியாக மாறி பதவியில் அமர்ந்து விட்டாலும், மனதளவில் இன்னும் நடிகர்களாகவே இருக்கின்றனரே...' என, புலம்புகின்றனர்.