PUBLISHED ON : ஜூலை 19, 2026 12:31 AM

'உச்சக்கட்ட விரக்தியில் இருக்கிறார் போலிருக்கிறது...' என, மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை கிண்டல் அடிக்கின்றனர், அங்குள்ள பா.ஜ., தலைவர்கள்.
மேற்கு வங்கத்தில், கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது.
தொடர்ந்து, 15 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த திரிணமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், பதவி சுகத்துக்காக வேறு கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்து வருகின்றனர்.
திரிணமுல் கட்சியின் பெரும்பாலான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள், தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் சிலர், பா.ஜ.,வுக்கு தாவி விட்டனர். விரல் விட்டு எண்ணக்கூடிய நிர்வாகிகள் தான், மம்தாவுடன் உள்ளனர்.
இதனால் ஆவேசம் அடைந்துள்ள மம்தா, 'பா.ஜ.,வின் வீழ்ச்சியை பார்க்கும் வரை நான் உயிருடன் இருப்பேன்; எந்த அச்சுறுத்தலுக்கும் அடங்க மாட்டேன்; யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து வெளியேறலாம்; எஞ்சியிருப்போரே என் உண்மையான சொத்து...' என கூறியுள்ளார்.
பா.ஜ.,வினரோ, 'ஒரே ஒரு தேர்தல் தோல்விக்கே, திரிணமுல் காங்கிரஸ் கலகலத்து விட்டதே. அடுத்த தேர்தலிலும் தோல்வி அடைந்தால், மம்தாவே கட்சியை கலைத்து விட்டு, காங்கிரசில் ஐக்கியமாகி விடுவார்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.
