PUBLISHED ON : அக் 01, 2024 12:00 AM

'வெளிப்படையாக நமக்கு எதிராக கருத்துதெரிவிப்பவர்களை கூட நம்பலாம்; ஆனால், இப்படி அநியாயத்துக்கு விஸ்வாசம் காட்டுபவர்களை மட்டும் நம்பவே கூடாது...' என, டில்லி முதல்வர் ஆதிஷி பற்றி கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.
டில்லியில் நடந்த மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கிய, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்றார். சமீபத்தில் ஜாமின் கிடைத்து வெளியில் வந்த அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, ஆம் ஆத்மியின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவரான ஆதிஷி முதல்வராக பதவியேற்றார். 'இன்னும் சில மாதங்கள் மட்டுமே நான் முதல்வராக இருப்பேன். அதன்பின் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்.
'அதுவரை முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன். ராமாயணத்தில், ராமருக்காக காத்திருந்த பரதன் போல், கெஜ்ரிவாலுக்காக காத்திருப்பேன்...' என, தடாலடியாக அறிவித்தார்.
இந்த விஷயத்தில், ஆதிஷிக்கு பாராட்டு கிடைப்பதற்கு பதிலாக, கடுமையான விமர்சனங்கள்தான் கிடைத்தன. 'நம் நாட்டு அரசியல் வரலாற்றில் விஸ்வாசம் காட்டுவது போல் வளைந்து, நெளிந்து நடித்து கும்பிடு போடுபவர்கள் தான், தங்கள் தலைவர்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.
'அந்த வரிசையில் ஆதிஷியும் இடம்பிடிப்பாரா என தெரியவில்லை. எதற்கும் கெஜ்ரிவால் உஷாராக இருப்பது நல்லது...' என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.