PUBLISHED ON : டிச 27, 2024 12:00 AM

'உண்மையிலேயே தைரியமான அரசியல்வாதி தான்...' என, தெலுங்கானா முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டியை பாராட்டுகின்றனர், அங்குள்ள மக்கள்.
ரேவந்த் ரெட்டி, ஆர்ப்பாட்டமில்லாத அரசியல்வாதி. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், கட்சியின் பல மூத்த தலைவர்கள் முதல்வர் பதவிக்காக காத்திருந்தும், இளைஞரான ரேவந்த் ரெட்டியை தேர்வு செய்தது கட்சி மேலிடம்.
சமீபத்தில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த, புஷ்பா -- 2படம் வெளியானது. ஹைதராபாதில் உள்ள தியேட்டருக்கு முதல் காட்சியை பார்க்க முன் அறிவிப்பின்றி சென்றார், அல்லு அர்ஜுன். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, ஒரு பெண் பலியானார். அவரது 9 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரத்தில், நெரிசல் ஏற்படக் காரணமாக இருந்ததாகக் கூறி, அல்லு அர்ஜுனை கைது செய்ய உத்தரவிட்டார், முதல்வர் ரேவந்த் ரெட்டி. அதுமட்டுமல்லாமல், அல்லு அர்ஜுனையும், அவருக்கு ஆதரவாக பேசிய சினிமா நட்சத்திரங்களையும் சட்டசபையில் ரேவந்த் ரெட்டி வெளுத்து வாங்கினார்.
'நடிகர்கள் என்றால் கொம்பா முளைத்திருக்கிறது. சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை உறுதி...' என, கொந்தளித்தார்.
தெலுங்கானா மக்களோ, 'ஒரு சில மாநிலங்களில் சிறிய நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கே பயப்படும் முதல்வர்களை பார்த்திருக்கிறோம். ஆனால், ரேவந்த் ரெட்டி, சூப்பர் நடிகரையே கைது செய்து விட்டாரே... சபாஷ்...' என, பாராட்டுகின்றனர்.

