PUBLISHED ON : ஜன 30, 2025 12:00 AM

'இந்த அநியாயத்தைக் கேட்பதற்கு ஆளே இல்லையா...?' என, எரிச்சலுடன் கூறுகின்றனர், டில்லியில் வசிக்கும் மக்கள்.
முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் டில்லியில், வரும் பிப்., 5ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு ஆம் ஆத்மியும், ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.,வும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. இவர்களுக்கு நடுவில், காங்கிரசும் கடுமையாக பிரசாரம் செய்து வருகிறது.
அனைத்துக் கட்சிகளும் தாராளமாக இலவசங்கள் குறித்த வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. 'ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதந்தோறும், 2,500 ரூபாய் உதவித் தொகை, முதியோருக்கு இலவச மருத்துவக் காப்பீடு, மாணவர்கள் மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம். குடிநீர், மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும்...' என, ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் சரளமாக, வாக்குறுதிகளை வாரி இறைக்கின்றனர்.
சமீபகாலம் வரை இலவசங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பா.ஜ.,வும், இப்போது வேறு வழியின்றி, இலவச கலாசாரத்துக்கு மாறி விட்டது. மற்ற கட்சிகளை மிஞ்சம் அளவுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது.
ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலோ, 'இலவச திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதிக்கு எங்கே போவீர்கள் என, பா.ஜ.,வினர் எங்களை கிண்டலடித்தனர். இப்போது, அவர்களே இலவச வாக்குறுதிகளை அறிவிக்கின்றனர். எதற்காக இந்த மாற்றம்? இந்த கேள்விக்கு அவர்கள் முதலில் பதில் சொல்லட்டும்...' என, கிண்டல் அடிக்கிறார்.

