PUBLISHED ON : ஜூலை 10, 2026 12:00 AM

'வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்து விட்டதே...' என கவலைப்படுகின்றனர், ஒடிஷா மாநிலத்தில் உள்ள பிஜு ஜனதா தளம் கட்சியினர்.
ஒடிஷாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தொடர்ந்து 24 ஆண்டுகளாக ஒடிஷா முதல்வராக பதவி வகித்த பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக், 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விடம் ஆட்சி யை பறி கொடுத்தார்.
இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டவர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், நவீன் பட்நாயக்கின் உதவியாளருமான வி.கே.பாண்டியன். தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன், படிப்படியாக பிஜு ஜனதா தளம் கட்சிக்குள் ஊடுருவி, ஆதிக்கம் செலுத்தினார்.
சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர், 'ஒடிஷாவின் அதிகாரம், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரின் கட்டுப்பாட்டிற்குள் செல்லப் போகிறது...' என, பாண்டியனை குறிப்பிட்டு பிரசாரம் செய்தனர். இதனால், பிஜு ஜனதா தளம் ஆட்சியை பறிகொடுத்தது. அதன்பின், அரசியலில் இருந்து விலகுவதாக, பாண்டியன் அறிவித்தார்.
இந்நிலையில், பாண்டியனின் மனைவியும், ஐ.ஏ.எஸ்., பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவருமான சுஜாதா, சமீபத்தில் பட்நாயக் முன்னிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பிஜு ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள், 'பாண்டியனின் தலையீடு காரணமாக ஏற்கனவே ஒரு தோல்வியை சந்தித்து விட்டோம். இப்போது அவர் மனைவி வந்து விட்டார். அடுத்து என்ன நடக்குமோ...?' என கவலைப்படுகின்றனர்.
