PUBLISHED ON : ஜூன் 30, 2026 12:00 AM

'இனியும் சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை வைத்து காலம் தள்ள முடியாது என்பது இவருக்கு தெரிந்து விட்டது...' என, டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கிண்டல் அடிக்கின்றனர் பா.ஜ.,வினர்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இதனால், கெஜ்ரிவால் உள்ளிட்ட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், அடிக்கடி பஞ்சாபுக்கு வரத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் பஞ்சாப் வந்த அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான ராம பஜனை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதில் அவர் பேசுகையில், 'ராமருக்கு அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. இதேபோல், சீதா தேவிக்கும் கோவில் கட்டப்பட வேண்டும். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் தான் சீதா தேவியும், அவரது புதல்வர்களான லவனும், குசனும் வசித்ததாக வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, அமிர்தசரசில் சீதா தேவிக்கு ஆம் ஆத்மி அரசு சார்பில் பிரமாண்ட கோவில் கட்டப்படும்' என்றார்.
பா.ஜ.,வினரோ, 'சில ஆண்டுகளுக்கு முன் வரை, எங்களை மதவாத கட்சி என விமர்சித்து வந்த கெஜ்ரிவால், இப்போதாவது ராமாயணத்தின் பெருமையை உணர்ந்து கொண்டாரே... அந்த வகையில் சந்தோஷம் தான்...' என்கின்றனர்.
