PUBLISHED ON : ஜூன் 29, 2026 12:42 AM

'கட்சியின் தலைவர் என்றும் பாராமல், இப்படி அவமதிக்கலாமா...?' என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்காக பரிதாபப்படுகின்றனர், கர்நாடக மாநில காங்., நிர்வாகிகள்.
கடந்த ஆறு ஆண்டுகளாக, காங்., கர்நாடக தலைவராக இருந்த டி.கே.சிவகுமார், சமீபத்தில் முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து, மாநில காங்., தலைவர் பதவி, ஹரிபிரசாத் என்பவருக்கு வழங்கப்பட்டது.
தலைவர் பொறுப்பை, ஹரிபிரசாத்திடம் முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சி, சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் கார்கே, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
இதில், கார்கே பேசத் துவங்கியபோது, அங்கு குவிந்திருந்த சிவகுமார் ஆதரவாளர்கள், அவரை வாழ்த்தும் வகையில், 'டிகே, டிகே' என, தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். கட்சியின் நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதனால், மைக் அருகே நீண்ட நேரம் பேச முடியாமல் நின்றிருந்தார் கார்கே.
பொறுத்து பொறுத்து பார்த்த கார்கே, 'இது, கட்சியின் முக்கியமான நிகழ்வு. தனிநபரை துதிபாடும் நிகழ்ச்சி அல்ல. தனிநபர்களை விட, கட்சியே பெரிது. இங்கு கோஷமிட்டவர்களை, 'வீடியோ' வாயிலாக அடையாளம் பார்த்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்...' என்றார் காட்டமாக.
'ஒரு பெரிய மனிதரை இப்படியா நோகடிப்பது...?' என, கார்கேவுக்காக பரிதாபப்படுகின்றனர் காங்., நிர்வாகிகள்.
