PUBLISHED ON : ஜூலை 16, 2025 12:00 AM

'சில ஆண்டுகளுக்கு முன் வரை, புதுமை விரும்பியாக இருந்த அரசியல்வாதியா இவர்...?' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், அங்குள்ள மக்கள்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்த போது, மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக, 'இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது...' என, அறிவித்தார்.
இப்போது, ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு விட்டது. ஆந்திரா சிறிய மாநிலமாக மாறி, மக்கள் தொகையும் குறைந்து விட்டது.
மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், ஆந்திராவில் தற்போதுள்ள, 25 லோக்சபா தொகுதிகள், 20 ஆக குறையும் என, கூறப்படுகிறது. இதனால், தேசிய அளவில் ஆந்திராவுக்கான முக்கியத்துவம் குறையும் என பயந்து போன சந்திரபாபு நாயுடு, தற்போது தலைகீழாக மாறி விட்டார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், 'அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வோருக்கு, மாநில அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்படும். தனிக்குடித்தனம் நடத்துவோர், கூட்டு குடும்ப முறைக்கு மாறினால், ரேஷன் கடைகளில் கூடுதலாக பொருட்கள் வழங்கப்படும்...' என, அடுக்கடுக்காக சலுகைகளை அறிவித்தார்.
இதை கேட்ட ஆந்திர மக்கள், 'பழைய சந்திரபாபுவா இது... இப்படி அடியோடு மாறி விட்டாரே...' என, ஆச்சரியப்படுகின்றனர்.