PUBLISHED ON : அக் 08, 2024 12:00 AM

'என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒருஅவமதிப்பை சந்தித்ததே இல்லை...' எனபுலம்புகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
கடந்த சில ஆண்டு களாகவே, பினராயி விஜயனுக்கு சில நெருக்கடிகள் அவ்வப்போது வந்து போகின்றன. ஆனால், தற்போது அவரது சித்தாந்தத்தையே சிதைக்கும் அளவுக்கு குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால் நொந்து போயுள்ளார்.
ஆளும் இடதுசாரி கூட்டணியின் முக்கியமானஎம்.எல்.ஏ., அன்வர். நீலாம்பூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டி யிட்டு வெற்றி பெற்றவர். இவர் தான், பினராயி விஜயனுக்கு தற்போது சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்.
கேரள உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர், முதல்வர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள சிலர், பா.ஜ.,வின் முக்கிய பிரமுகர்களுடன் நெருக்கமாக இருந்து வருவதாக, அன்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
தங்க கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் இருந்து முதல்வர் உள்ளிட்டோர் தப்பிப்பதற்காக இவர்கள் திரைமறைவு பேச்சு நடத்தி வருவதாகவும், முதல்வரின் சம்மதத்தின் அடிப்படையிலேயே இது நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை பினராயி விஜயன் மறுத்தாலும், அவரது அரசியல் வாழ்க்கையின் அடித்தளத்தையே அசைக்கும் அளவுக்கு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
'என் நிம்மதியை கெடுப்பதற்கென்றே, அன்வரை போன்றவர்கள் எங்கிருந்து கிளம்பி வருகின்றனரோ...' என்கிறார், பினராயி விஜயன்.