PUBLISHED ON : மே 26, 2026 12:00 AM

'எப்படியோ, முதல்வராக பதவியேற்றாகி விட்டது; ஆனால், அதை தக்கவைத்துக் கொள்வது பெரிய சவாலாக இருக்கும் போலிருக்கிறதே...' என கவலைப்படுகிறார், கேரள முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சதீசன்.
கேரளாவில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான பினராயி விஜயன் அரசு படுதோல்வியை சந்தித்தது.
காங்கிரஸ் ஆட்சியை பிடித்தாலும், முதல்வரை தேர்வு செய்வதில் அந்த கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவியது. காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால், கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் சதீசன் இடையே, முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.
காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தலையிட்டதன் அடிப்படையில், தேர்தல் முடிவு வெளியாகி 14 நாட்களுக்குப் பின், முதல்வராக சதீசன் பதவியேற்றார். ஆனால், ஒரு வாரத்துக்குள்ளேயே அவருக்கு குடைச்சல் துவங்கி விட்டது.
முதல்வர் பதவி கிடைக்காத ரமேஷ் சென்னிதலா, தன் ஆதரவாளர்களுடன் அடிக்கடி ரகசிய கூட்டங்கள் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி கட்சிகளும், அமைச்சரவையில் தங்களுக்கு வளமான துறைகள் ஒதுக்க வேண்டும் என போர்க்கொடி துாக்கியுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
இதனால் விரக்தி அடைந்துள்ள சதீசன், 'முதல்வராக பதவியேற்ற ஒரு வாரத்துக்குள்ளேயே நிம்மதி போய்விட்டதே...' என புலம்புகிறார்.
