PUBLISHED ON : ஜூலை 24, 2025 12:00 AM

'தந்தை ஸ்டைலை இவரும் பின்பற்றுகிறார் போலிருக்கிறதே...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் பற்றி கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.
நிதிஷ் குமாரின் சமீபகால நடவடிக்கைகள் எதிர்க்கட்சியினரிடையே சலசலப்பையும், கிண்டலையும் ஏற்படுத்தி உள்ளன. 'ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசு நிகழ்ச்சிகளில், தன்னை விட வயது குறைந்த அதிகாரிகள் கால்களில் விழுவது, மலர் கொத்துகளை அதிகாரிகளின் தலையில் வைப்பது என, நிதிஷின் நட வடிக்கைகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றன.
சமீபகாலமாக அவரது மகன் நிஷாந்த் குமாரையும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிகழ்ச்சிகளில் பார்க்க முடிகிறது. தனக்கு பின் தன் அரசியல் வாரிசாக மகனை முன்நிறுத்துகிறாரோ என, கட்சி நிர்வாகிகள் யோசிக்கத் துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தான், சமீபத்தில் பக்தியார்புர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிஷாந்த் குமார், அந்த மாவட்ட கலெக்டரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்; இது, அங்கு கூடியிருந்தோரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதை பார்த்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர், 'தந்தையின் அரசியல் வாரிசு நான் தான் என்பதை நமக்கு நிரூபிப்பதற்காக, அதிகாரியின் காலில் விழுகிறாரோ...' என, முணுமுணுத்தனர்.