PUBLISHED ON : ஏப் 16, 2025 12:00 AM

'வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது, பர்சை எடுக்க மறக்கிறாரோ இல்லையோ, கேமராவை எடுக்க மறக்க மாட்டார் போலிருக்கிறது...' என, டில்லி முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ரேகா குப்தாவை கிண்டல் அடிக்கின்றனர், எதிர்க்கட்சியினரான ஆம் ஆத்மி கட்சியினர்.
சில மாதங்களுக்கு முன் டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது.
இதையடுத்து, முதல் முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தாவை முதல்வராக தேர்வு செய்தது பா.ஜ., மேலிடம். இவர், ஏற்கனவே டில்லியில் பா.ஜ., கவுன்சிலராக பதவி வகித்தாலும், பெரிய அளவில் அறிமுகம் இல்லாதவர். முதல்வராக பதவியேற்றதுமே ரேகா குப்தா சுறுசுறுப்பாக களம் இறங்கி விட்டார்.
வளர்ச்சி திட்டங்கள் குறித்து களத்துக்கே சென்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்வது, ஒவ்வொரு தொகுதியாக சென்று மக்களிடம் குறைகளை கேட்பது என தீவிரமாக செயல்படுகிறார். இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தினமும் பதிவிடுகிறார்.
'ரேகா குப்தா ஒரு விளம்பர பிரியை. இவரது புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவராத நாட்களே இல்லை. வேலையை பார்ப்பதை விட, புகைப்படங்கள் எடுப்பதில் தான் ஆர்வமாக உள்ளார்...' என, கிண்டல் அடிக்கின்றனர், ஆம் ஆத்மி கட்சியினர்.
ரேகாவின் ஆதரவாளர்களோ, 'உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்...' என, ஆம் ஆத்மி கட்சியினரை போட்டு தாக்குகின்றனர்.