PUBLISHED ON : பிப் 11, 2025 12:00 AM

'தோல்வியை எதிர்பார்த்தோம்; ஆனால், இவ்வளவு மோசமான தோல்வி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை...' என, விரக்தியுடன் கூறுகின்றனர், டில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர்.
டில்லியில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மிக்கும், ஆட்சியை பிடிக்க பா.ஜ.,வுக்கும் கடும் போட்டி நடந்தது. தொடர்ச்சியாக இரண்டு சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்த ஆம் ஆத்மி, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடிக்க தீவிரமாக முயற்சித்தது.
மற்றொரு பக்கம், 'எப்படியாவது தலைநகரை கைப்பற்றி விட வேண்டும்...' என, பா.ஜ., தலைவர்கள் களத்தில் இறங்கி, தீவிரமாக பணியாற்றினர். அவர்களது முயற்சிக்கு பலன் கிடைத்தது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், 48 இடங்களை கைப்பற்றி பா.ஜ., ஆட்சியை பிடித்து விட்டது. ஆம் ஆத்மிக்கு, 22 தொகுதிகள் தான் கிடைத்தன. முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலே, புதுடில்லி தொகுதியில் தோல்வி அடைந்து விட்டார்.
இதை, ஆம் ஆத்மி கட்சியினரால் ஜீரணிக்கவே முடியவில்லை. 'தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம் தான். ஆனால், எங்கள் தலைவர் கெஜ்ரிவாலை மக்கள் புறக்கணித்து விட்டனரே. இனி எப்படி கட்சி நடத்தப் போகிறோம் என தெரியவில்லை...' என்று புலம்புகின்றனர்.
டில்லி மக்களோ, 'ஏழை பங்காளனாக வெளியில் வேஷம் போட்டு விட்டு, உள்ளுக்குள் ஊழல் மன்னனாக வலம் வந்தால் எப்படி ஏற்க முடியும்...' என, கடுப்புடன் கூறுகின்றனர்.

