PUBLISHED ON : மே 10, 2025 12:00 AM

'இவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காலை வாரி விடலாம்; இவரிடம் சற்று உஷாராகத் தான் இருக்க வேண்டும்...' என, சமாஜ்வாதி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பற்றி எச்சரிக்கையுடன் பேசுகின்றனர், காங்கிரஸ் கட்சியினர்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதியும், காங்கிரசும் இணைந்து போட்டியிட்டன; இதில், இரண்டு கட்சிகளுமே கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றன.
அந்த தேர்தலுக்கு பின், இரண்டு கட்சிகளுக்கும் முட்டல், மோதல் ஏற்பட்டது. 'எங்களால் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது...' என, சமாஜ்வாதி கட்சியினரும், 'எங்களின் ஆதரவுடன் தான், சமாஜ்வாதி வெற்றி பெற்றது...' என, காங்கிரஸ் கட்சியினரும் பரஸ்பரம் கூறத் துவங்கினர்.
இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்ததும், அதற்கு பின் நடந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிடுவதாக அகிலேஷ் அறிவித்தார்.
இதனால், விரைவில் நடக்கவுள்ள பீஹார், அதைத் தொடர்ந்து, 2027ல் நடக்கவுள்ள உ.பி., சட்டசபை தேர்தல்களில் இந்த கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
'நட்புடன் இருப்பது போல் காட்டிவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் நம்மை கழற்றிவிட அகிலேஷ் தயங்க மாட்டார். அவரை நம்ப முடியாது; அதனால், தனித்து நிற்பதற்கு இப்போதே தயாராக வேண்டும்...' என்கின்றனர், உ.பி., காங்கிரசார்.

