PUBLISHED ON : மே 10, 2026 12:00 AM

'புதிய கட்சி துவங்கியது பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால், எங்கள் கட்சியின் பெயரையே அவரும் வைத்திருப்பது தான் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது...' என, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா குறித்து எரிச்சலுடன் பேசுகின்றனர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினர்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி, பிரதான எதிர்க் கட்சியாக உள்ளது.
கடந்த 2022 வரை, இந்த கட்சியின் பெயர், 'தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி' என்று தான் இருந்தது. ஜோதிடர்கள் ஆலோசனைப்படி, கட்சியின் பெயரை, 'பாரத் ராஷ்ட்ர சமிதி' என, சந்திரசேகர ராவ் மாற்றினார்.
இந்நிலையில், சந்திரசேகர ராவின் மகள் கவிதா, தன் தந்தையுடன் ஏற்பட்ட மோதலால், சமீபத்தில் புதிய கட்சியை துவக்கினார். இந்த கட்சிக்கு, 'தெலுங்கானா ராஷ்ட்ர சேனா' என பெயர் சூட்டியுள்ளார்.
இதை பார்த்த பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினர், 'எங்கள் கட்சியின் பழைய பெயர், தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி. இதில், சமிதி என்ற வார்த்தையை மட்டும் துாக்கி விட்டு, தன் கட்சிக்கு தெலுங்கானா ராஷ்ட்ர சேனா என, கவிதா பெயர் சூட்டியுள்ளார். தந்தை வேண்டாம்; ஆனால், அவரது கட்சி பெயர் மட்டும் கவிதாவுக்கு வேண்டுமா...' என ஆவேசப்பட்டனர்.
இதையடுத்து கட்சியின் பெயரை, 'தெலுங்கானா ரக் ஷனா சேனா' என, கவிதா மாற்றியுள்ளார். ஆனாலும், சமாதானம் அடையாத பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினர், 'இன்னும் சில மாதங்களில் கவிதாவின் கட்சி காணாமல் போய் விடும்...' என, சாபம் விடுகின்றனர்.
