PUBLISHED ON : அக் 03, 2026 12:00 AM

‘எய்தவர்களை விமர்சிப்பதை விடுத்து, என்னை திட்டுவது என்ன நியாயம்...?’ என பொருமுகிறார், காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவின் தலைவரான கண்ணையா குமார்.
வட மாநிலங்களில் உள்ள பிரபலமான பல்கலைக் கழகங்களில் நடக்கும் மாணவர் சங்கங்களின் தேர்தல், சட்டசபை தேர்தலை விட விறுவிறுப்பாக நடக்கும். இந்த தேர்தலில், பிரபல அரசியல் கட்சிகளின் மாணவர் பிரிவினரே போட்டியிடுவர்.
சமீபத்தில் டில்லி பல்கலையில் மாணவர் சங்க தேர்தல் நடந்தது. இதில், துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் வீர் சத்ராத் என்பவர் போட்டியிட்டார். இவர், டில்லியில் உள்ள காங்., மூத்த தலைவர் ஒருவரின் மகன்.
காங்., மாணவர் அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவரான தேஷ்பான்சு, தனக்கு, ‘சீட்’ கிடைக்காததால், அதிகாரப்பூர்வ காங்., வேட்பாளரான வீர் சத்ராத்தை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டார். முடிவில், 30 ஆயிரத்து 615 ஓட்டுகள் வித்தியாசத்தில் தேஷ்பான்சு வெற்றி பெற்றார். காங்., வேட்பாளருக்கு 4,313 ஓட்டுகளே கிடைத்தன.
இதனால் ஆத்திரம் அடைந்த காங்., பிரமுகர்கள், ‘வெற்றி வாய்ப்புள்ளவருக்கு சீட் கொடுக்காமல் வாரிசுக்கு சீட் கொடுத்து, தோல்வி அடைய செய்து விட்டார்...’ என, கண்ணையா குமாரை வறுத்தெடுக்கின்றனர்.
கண்ணையா குமாரோ, ‘பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம் என்ற கதையாக உள்ளது. கட்சியின் மேலிடத் தலைவர்களை விமர்சிப்பதற்கு பதிலாக என்னை திட்டுகின்றனரே...’ என புலம்புகிறார்.
