PUBLISHED ON : அக் 02, 2026 12:00 AM

‘என்ன தான் அமைச்சராக இருந்தாலும், சிறு வயதில் அவருக்குள் இருந்த ஆசைகள் வெளிப்படாமலா போகும்...?’ என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவருமான ராம்மோகன் நாயுடு குறித்து கூறுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.
பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் அங்கம் வகிக்கிறது. இந்த கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ராம்மோகன் நாயுடு, விமான போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார்.
சமீபத்தில், கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான, ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்’ விமான தயாரிப்பு நிறுவனத்துக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ராம்மோகன் நாயுடு சென்றார்.
அங்கு தயாரிக்கப்படும் விமானங்களை இருவரும் பார்வையிட்டனர். அப்போது ராம்மோகன் நாயுடு, ‘இளம் வயதில், பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட விமான பொம்மைகளை வாங்கி விளையாடி இருக்கிறேன். இப்போது இந்த இடத்துக்கு வந்தபோது, அந்த மலரும் நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன...’ என, ஆச்சரியத்துடன் கூறினார்.
அருகில் இருந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ராம்மோகன் நாயுடுவுக்கு 38 வயது தான் ஆகிறது. அதனால், இளம் வயதில் விமான பொம்மைகளை வைத்து விளையாடியது, அவருக்கு இன்னும் மறக்கவில்லை போலிருக்கிறது...’ என, நகைச்சுவையாக பேசினார்.
