PUBLISHED ON : அக் 01, 2026 12:00 AM

'பள்ளியிலும், வீட்டிலும் தான் பயந்து வாழ்ந்தோம் என்றால், இப்போது அதிகாரிகளான பின்னும் பயந்து வாழ வேண்டியுள்ளதே...' என புலம்புகின்றனர், ஆந்திர மாநிலத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் - ஜன சேனா - பா.ஜ., கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆந்திராவை, பொருளாதார ரீதியில், வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் தொடங்கியுள்ளார்.
குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் அல்லாமல், மாநிலம் முழுதும் பரவலாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் சந்திரபாபு நாயுடு உறுதியாக உள்ளார். இதற்காக, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் தலைமைச் செயலகத்துக்கு அழைத்து, ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த இரண்டு மாதங்களும், தங்கள் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றும் துவக்கப்பட்ட வளர்ச்சி பணிகளை, அனைத்து கலெக்டர்களும் அறிக்கையாக முதல்வரிடம் தாக்கல் செய்ய வேண்டும். இதில் திருப்தி ஏற்படா விட்டால், சம்பந்தப்பட்ட கலெக்டர்களுக்கு, 'டோஸ்' விழும்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, சில கலெக்டர்கள் மொபைல் போனை பார்த்து கொண்டிருந்தது, முதல்வரின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து, கூட்டத்திற்கு மொபைல் போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விரக்தி அடைந்துள்ள கலெக்டர்கள், 'பள்ளிக்கூடமாவது பரவாயில்லை போலிருக்கிறது...' என புலம்புகின்றனர்.
