PUBLISHED ON : செப் 30, 2026 12:00 AM

'கட்சியின் பெயரை மாற்றினால், நமக்கு மிகப் பெரிய திருப்புமுனை ஏற்படும்...' என, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.
பீஹார் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சாம்ராட் சவுத்ரி, கடந்த ஏப்ரலில் தான் முதல்வராக பதவியேற்றார். அதற்கு முன், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார்.
கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, நிதிஷ் குமாருக்கு பதிலாக சாம்ராட் சவுத்ரி முதல்வரானார். இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா சமீபத்தில் பேசுகையில், 'நம் கட்சிக்கு நல்லது நடக்க வேண்டுமானால், கட்சியின் பெயரை, 'நிதிஷ் ஐக்கிய ஜனதா தளம்' என மாற்ற வேண்டும்.
'நிதிஷ் குமாரின் அரசியல் ஆளுமையை சுற்றியே கட்சி கட்டமைக்கப்பட்டு உள்ளதால், அவரது பெயரை கட்சியின் பெயருடன் இணைக்க வேண்டும்...' என்றார்.
எதிரணியைச் சேர்ந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினரோ, 'கட்சியின் பெயரை மாற்றுவதற்கு முன் நன்றாக யோசியுங்கள். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி என்ற பெயரை, பாரத் ராஷ்ட்ர சமிதி என மாற்றியதற்கு பின் தான், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் படுதோல்வி அடைந்தார். அதனால், பெயர் மாற்றம் கை கொடுக்குமா என ஜோதிடரிடம் ஆலோசனை நடத்துங்கள்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.
