PUBLISHED ON : செப் 09, 2011 12:00 AM
எது சத்தான பால்?
செயற்கை கலப்பு பசுக்கள் தரும் பாலை விட, இந்தியப் பசுக்கள் தரும் பால் தான் சத்து நிறைந்தது என ஓர் ஒப்பீட்டு ஆராய்ச்சி தெரிவிக்கிறது.வெளிநாட்டு பசு வகைகளின் பரவலால், இந்திய பசுக்களை இழந்து விட்டோம்.
இவற்றை மீண்டும் பரவலாக்க கால்நடைத்துறை முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியப் பசுக்கள் அம்ரித் மகால், கிருஷ்ணா, தியோனி, கிர், ஹலிக்கர், அரியானா, காங்கேயம், காங்க்ராஜ், கில்லாரி, வெச்சூர், நிமாரி, சிந்து, புங்கனூர், சகிவால், மால்வி, தார்பார்க்கர், ரதி போன்றவை ஆகும். இவற்றில் ஏ2 அலிலி என்ற மரபணு உள்ளது. இது சத்தான பால் தர உதவுகிறது. இந்திய பசுக்களை விட, வெளிநாட்டு கலப்பின பசுக்கள் தரும் பாலின் அளவு அதிகமாகும். ஆனால் அதில் ஏ1 அலிலி வகை மரபணு உள்ளது. இது அதிக சத்தான பாலைத் தருவதில்லை. இந்திய சூழலுக்கு வெளிநாட்டு பசுக்களை பழக்குவதில் கவனம் செலுத்துவதை விட, இந்தியாவின் பாரம்பரிய பசுக்களை பரவலாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
தகவல் சுரங்கம்
குஜராத்தில் ஒரு பிரிவினை?
ஒரு மாநிலம், அந்த மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் வேறுபாடின்றி கவனித்தால், தனி மாநில கோரிக்கைகள் வலுவிழந்து விடும் என்பதற்கு உதாரணமாக கட்ச் மாநில கோரிக்கை உள்ளது.குஜராத்தில் இன்று யாருமே கட்ச் மாநிலம் குறித்து பேசுவது இல்லை. கட்ச் வளைகுடா மற்றும் அரபிக்கடலால் சூழப்பட்ட பகுதியான கட்ச் ஒரு தீவுப்பகுதியாகும். இது முந்தைய குஜராத் மாநில அரசுகளால் கவனிக்கப்படாமல் இருந்த போது, கட்ச்சை தனி மாநிலமாக ஆக்க வேண்டும் என்ற வாதம் இருந்தது. பின் கட்ச்சில் அதிகளவில் தொழில் துறை நிறுவனங்கள் துவங்கப்பட்டன.பிரிவினையின் போது கட்ச் துறைமுகம் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டதால், இந்திய அரசு கண்ட்லா செயற்கை துறைமுகத்தை கட்ச் பகுதியில் உருவாக்கியது. கட்ச்சில் உள்ள கனிம வளங்களைப் பயன்படுத்தியும் இங்கு தொழில்கள் துவங்கப்பட்டன. கட்ச் என்ற சொல்லுக்கு ஈரமான, உலர்ந்த நிலம் என்ற பொருளாகும். அத்தகைய வித்தியாசமான நிலத்திலும் வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தியதால், தனி மாநிலக் கோரிக்கை மறைந்தே விட்டது.

