PUBLISHED ON : செப் 05, 2011 12:00 AM
'தேன் மாநிலம்'
இந்தியாவின் 'தேன் மாநிலம்' என பஞ்சாப் அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் தேனின் தேவையை விட, உற்பத்தி குறைவாகவே உள்ளது. இந்தியாவின் இந்த மொத்த உற்பத்தியில், 30 சதவீதம் பஞ்சாப் மாநிலத்தில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, உலகம் முழுவதும் 47 நாடுகளுக்கு தேன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில், விவசாயத்தில் பஞ்சாப் தான் முன்னணியில் உள்ளது. பஞ்சாப் விவசாயிகள் தான், இந்தியாவில் பணக்கார விவசாயிகளாக உள்ளனர். பஞ்சாபின் விவசாய செழிப்புக்கு, இந்த தேன் உற்பத்தியே காரணமாகும். தேனீயின் மூலமாக அதிகளவில் அயல் மகரந்தச்சேர்க்கை ஏற்பட்டு, பஞ்சாபில் விவசாயமும் செழிக்கிறது.மோகி, பரிகாட், பெரோஷாபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 25 ஆயிரத்துக்கும் அதிகமாக தேனீ வளர்ப்பவர்கள் உள்ளனர். அவர்கள் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான தேனீப் பெட்டிகளை வைத்துள்ளனர்.
தகவல் சுரங்கம்
பட்டு சீசன்
உலக அளவில், மொத்தம் 40 நாடுகள் பட்டு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளன. எனினும் இதில் முன்னிலை வகிப்பது ஆசியக் கண்டமே ஆகும். உலகின் மொத்த பட்டு உற்பத்தியில் 95 சதவீத பங்கு, ஆசியாவின் பங்களிப்பு ஆகும். இதில் சீனாவுக்கு அடுத்த படியாக, மிகப்பெரிய பட்டு உற்பத்தியாளராக மட்டுமின்றி, பட்டை அதிக அளவில் பயன் படுத்தும் நாடாகவும் இந்தியாவே உள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ் வரை பட்டு விற்பனை அதிகமாக இருக்கும். பாரம்பரிய பட்டுக்கு இந்தியாவில் வரவேற்பு உள்ளது. பட்டு விற்பனை மையங்களும் புரட்டாசி தள்ளுபடி, தீபாவளி சிறப்பு விற்பனை என பட்டு வர்த்தகத்தில் சிறப்பு கவனம் செலுத்துகின்றன. இந்தியாவில் மல்பெரி பட்டு வகையே அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. டசார் வகை பட்டு உற்பத்தியில் மத்தியப்பிரதேசம், ஒடிசா, பீகார் மாநிலங்களும், முகா, எரி பட்டு வகையில் அசாம் மாநிலமும் முன்னணியில் உள்ளன.

