PUBLISHED ON : ஜூலை 11, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
அமில மழை ஏற்படுவது எப்படி
'நீரின்றி அமையாது உலகு' என்கிறார் திருவள்ளுவர். இந்த நீருக்கு முதன்மையான ஆதாரம் மழை நீர். இதுதான் நீரின் துாய்மையான வடிவம். எனினும் தொழிற்சாலைகளில் கழிவு வெளியேற்றம், எரி பொருள்களை எரித்தல், எரிமலை வெடிப்பு போன்ற வற்றால் காற்றில் கலக்கும் மாசுபாடு வாயுக்களான நைட்ரஜன், சல்பர் ஆக்சைடுகள் போன்றவை மழைநீரில் கரைந்து நைட்ரிக் அமிலம், சல்பூரிக் அமிலங்களை உருவாக்கி மழைநீரை, அமில மழையாக மாற்றுகிறது. துாய மழை நீரின் பி.எச்., மதிப்பு 5.6. ஆனால் அமில மழையின் பி.எச்., மதிப்பு 5.6ஐ விட குறைவு.
தகவல் சுரங்கம்
மக்கள்தொகை தினம்
மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூலை 11ல் உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1987 ஜூலை 11ல் உலக மக்கள்தொகை 500 கோடியை தொட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஜூலை 11ல் இத்தினத்தை ஐ.நா., உருவாக்கியது. உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது. இது 2030ல் 850 கோடி, 2050ல் 970 கோடி, 2100ல் 1090 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 'எவரையும் தவறவிடாதீர்கள்; ஒவ்வொருவரையும் கணக்கெடுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.