PUBLISHED ON : ஜன 03, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
16 முறை புத்தாண்டு கொண்டாட்டம்
பூமியில் இருந்து 400 கி.மீ., உயரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விஞ்ஞானிகள், 16 முறை புத்தாண்டை கொண்டாடும் வாய்ப்பை பெற்றவர்கள். பூமியில் தலா 12 மணி நேரம் பகல், இரவாக உள்ளது. இந்த விண்வெளி மையத்தில் இருப்பவர்களுக்கு 45 நிமிடம் பகல், 45 நிமிடம் இரவு என மாறுகிறது. ஏனெனில் இது மணிக்கு 28 ஆயிரம் கி.மீ., வேகத்தில் சுற்றுகிறது. ஒரு நாளைக்கு 16 முறை பூமியை சுற்றுகிறது. இதனால் தலா 16 சூரிய உதயம், மறைவை சந்திக்கின்றனர்.
தகவல் சுரங்கம்
பனியில் தடம் பதித்த பெண்
பூமியில் முழுவதும் பனிப்பாறையால் சூழப்பட்ட பகுதி அண்டார்டிகா. இங்கு மனிதர்கள் நிரந்தரமாக வசிக்க இயலாது. ஆராய்ச்சிக்காக மட்டும் பல நாடுகளின் விஞ்ஞானிகள் சில நாட்கள் தங்கி பணியாற்றுகின்றனர். அண்டார்டிகாவில் முதலில் காலடி எடுத்து வைத்த பெண்மணி டென்மார்க்கின் கரோலின் மிக்கெல்சன். 1906ல் பிறந்த இவர் கணவருடன் நார்வேக்கு இடம்பெயர்ந்தார். 1935ல் கணவரும், கப்பல் கேப்டனுமான கிளாரஸ் மிக்கெல்சன் அடங்கிய ஆராய்ச்சி குழுவுடன் 'தோர்ஷவ்ன்' கப்பலில் அண்டார்டிகா சென்ற இவர், பிப். 20ல் அங்கு காலடி வைத்தார்.