PUBLISHED ON : ஜூலை 26, 2011 12:00 AM
காற்று கால பானங்கள்
காற்று அதிகமாக அடிக்கும் காலத்தில், நம் தோல் வெயில் காலத்தைப் போலவே உலரும்.
எனவே கோடை காலத்தைப் போல், காற்று காலத்திலும் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும்,அவ்வப்போது தண்ணீர் குறைந்த அளவாவது குடிக்க வேண்டும்.காற்று அடிக்கும் காலத்தில் கிருமிகள் பரவும் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் தட்டம்மை, காலரா, சளி, இருமல், ஜுரம் போன்றவை மக்களைப் பாதிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும். இவ்வியாதிகளால் நமது உடலில், தாது உப்புகளின் அளவு குறையும். இந்தக் குறையைப் போக்கவே ஆடி மாதத்தில் கூழ் வழங்கும் வழக்கம் வந்தது. இந்தக் கூழில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை உள்ளன. வெயில் காலத்தில் பந்தல் அமைத்து தண்ணீர், பானகம், நீர் மோர் வழங்குவதைப் போல, காற்று காலத்தில் கோயில்களில் கூழும், களியும் வழங்குவர்.
தகவல் சுரங்கம்
வெளிநாட்டுக்கு பஸ்கள்
லாகூருக்கு வாகா, அட்டாரி எல்லை வழியாக விடப்பட்ட பஸ்கள் முடிவுக்கு வந்துவிட்டன. எனினும் இந்தியாவில் இருந்து அண்டை நாடான வங்கதேசத்துக்கு பஸ் பயணங்கள் தொடர் கின்றன. கோல்கட்டாவில் இருந்து புறப்படும் இந்தப் பஸ், 12 மணி நேரப் பயணத்தில் தலைநகர் டாகாவை அடைகிறது. மேற்குவங்க மாநில போக்குவரத்துக்கழக அரசுப் பஸ்கள் தவிர, தனியார் நிறுவனங்களின் பஸ்களும் டாகா சென்று வருகின்றன. நம்மைப் போலவே, வங்கதேச அரசும் பஸ் போக்குவரத்தை கோல்கட்டாவுக்கு நடத்துகின்றன.பஸ் பயணம் என்றாலும், விசா நடைமுறை களும் உள்ளன. 'சார்க் நாடுகளின் ஒற்றுமை' என்று உச்சி மாநாடுகளில் பேசினாலும், சார்க் நாடுகளுக்குள் போய் வரவே விசா நடைமுறைகள் தான் உள்ளன. ஐரோப்பிய யூனியனுக்குள் உள்ள நாடுகள், விசா நடைமுறைகளை தங்களுக்குள் தளர்த்தி விட்டன.

