PUBLISHED ON : ஜன 09, 2024 12:00 AM
கண் சிவப்பது ஏன்
கண்கள் உலர்ந்துவிடாமல் ஈரமாக இருப்பதற்காக, நம் கண்களில் எப்போதும் சிறிதளவு கண்ணீர் கசிந்து கொண்டு இருக்கும். துக்கம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிப் பெருக்கில் கண்ணிலிருந்து கண்ணீர் வரும். எல்லாத் தசைகளையும் போலவே கண்ணிலும் நுண்ணிய ரத்த நாளங்கள் உள்ளன. அவை மெலிதாக இருப்பதால் எளிதில் புலப்படாது. கண்ணீர்ச் சுரப்பி கூடுதலாகக் கண்ணீர் சுரக்க வேண்டும் எனில், கூடுதல் ரத்தம் பாயவேண்டும். இதன் காரணமாக கண்ணீர் சிந்தும் சமயத்தில் ரத்த நாளம் விரிகின்றன. இதனால் கண் சிவப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
தகவல் சுரங்கம்
வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ்
இந்தியர்களின் பங்கு முக்கியமானது. வெளிநாடு வேலைக்கு செல்லும் இந்தியர்களில் சிலர் காலப்போக்கில் அங்கேயே குடியுரிமை பெறுவது அதிகரிக்கிறது. அவர்களையும் நாம் இணைக்க வேண்டும் என்ற நோக்கில் 2003ல் ஜன., 9, வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். காந்தியடிகள் தென் ஆப்ரிக்காவில் இருந்து 1915 ஜன. 9ல் இந்தியாவின் மும்பை வந்து சேர்ந்தார். இத்தினத்தை நினைவுபடுத்தும் விதமாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.