/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
எந்த மிரட்டலுக்கும் அஞ்சாத 'தினமலர்'
/
எந்த மிரட்டலுக்கும் அஞ்சாத 'தினமலர்'
PUBLISHED ON : மார் 09, 2026 01:59 AM

எந்த மிரட்டலுக்கும் அஞ்சாத 'தினமலர்'
நேர்கொண்ட பார்வை, யாருக்கும் அஞ்சாத வீரநடை என, நாளும் நன்மை பயக்க தினம்தோறும் மலரும், 'கடல் தாமரை ' தினமலர் நாளிதழ். இன்றைய தகவல் தொழில்நுட்ப புரட்சி காலத்தில், தினசரி பத்திரிகை நடத்துவது எளிதான காரியம் அல்ல. யாருக்கும் அஞ்சாமல், எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல், எடுத்துக் கொண்ட லட்சியத்துடன் தினமலர் நாளிதழை தொடங்கி, தமிழக நெஞ்சங்களுக்கு நெருக்கமானவர், தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர். அவரது வழியில், தினமலர் நாளிழை தினமும் வளரச் செய்யும் அவரது வழித்தோன்றல்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
நான் இன்றுவரை தினமலர் நாளிதழ் வாசிக்காத நாளே கிடையாது. எவ்வளவு பணிகள் இருந்தாலும் கூட, தினமலர் நாளிதழை வாசித்து முடிக்காமல் மற்ற பணிகளுக்கு செல்வதில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த எனக்கு வழிகாட்டியதில், தினமலர் நாளிதழுக்கு பெரிய பங்கு உண்டு. அதில் வரும் அத்தனை செய்திகளையும் படித்து அறிந்து கொண்டதால் தான், என்னால் சிறப்பாக பணியாற்ற முடிந்தது.
அன்றாட அரசியல் செய்திகள்; உள்ளூர் செய்திகளுக்கு தனியாக நான்கு பக்க இணைப்பு; உலக செய்திகளுக்கு ஒரு பக்கம்; தொழிலுக்கு ஒரு பக்கம்; தற்போது லாபத்துக்கு ஒரு பக்கம் என, தினமலர் நாளிதழ் தொடாத துறைகளோ, விடாத செய்திகளோ இல்லை. எந்த அதிகாரி தவறு செய்கிறார்; எந்த அரசியல்வாதி மக்களுக்கு விரோதமாக நடக்கிறார் என்பதை அறிய, தினமலர் டீக்கடை பெஞ்ச் பக்கத்தை பார்த்தாலே போதும். வாசகர்களும் தங்களுடைய கருத்துக்களை எழுதி அனுப்ப, அதை அப்படியே வெளியிடுவது தினமலர் நாளிதழ் மட்டுமே. இதனால் தான் தினமலர் நம்பர் 1 நாளிதழாக உள்ளது.
தினமலர் ஆன்மிக மலரில், காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் குறித்து அரிய தகவல்களை தருவது சிலிர்க்க வைக்கிறது. அதில் வரும் கோவில்களும், தலவிருட்சங்களும், ஒவ்வொரு கோவிலிலும் வழங்கப்படும் பிரசாதம் குறித்த தொடர் கட்டுரைகளை யாரும் வாசிக்காமல் இருக்க முடியாது. அதில், நானும் விதிவிலக்கல்ல. எங்கள் வீட்டில் காஞ்சி பெரியவர் குறித்த ஒவ்வொரு செய்தியையும் முடிந்தளவு சேகரித்து வருகிறோம். எனது இரு குழந்தைகளும் தினமலர் நடத்தி வரும், 'வழிகாட்டி', 'ஜெயித்து காட்டுவோம்' நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தனர். அதில், தினமலர் சார்பில் பங்கேற்ற வல்லுநர்கள் சொல்லியபடி உயர் கல்வியை தேர்வு செய்து படித்து, இன்று நல்ல நிலையில் உள்ளனர். தினமலர் நாளிதழ் ஒரு பக்க அளவில் சுவாமி படங்களை வெளியிடுவதை, வர்த்தக நிறுவனங்கள்கூட ஒட்டி வைத்துக் கொள்கின்றன. பலர் தங்களின் வீட்டு பூஜை அறைகளில் அதை ஒட்டி வைத்து, வழிபடுவதை பல இடங்களில் நானே பார்த்திருக்கிறேன். அந்த அளவுக்கு படங்களை பளிச் என தெள்ளத் தெளிவாக தருவது தினமலர் நாளிதழ் மட்டுமே. நாட்டுப்பற்றை மூச்சாக கொண்ட தினமலர் நாளிதழ், இன்னும் பல நுாறாண்டு காலங்களுக்கு, வருங்கால சந்ததியினருக்கும் வழிகாட்ட, மலர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
வி. சண்முகசுந்தரம், அறங்காவலர்,சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், திருப்பரங்குன்றம், பொது மேலாளர், ஹைடெக் அராய் தொழில் நிறுவனம், மதுரை

