/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
எளிமையான எழுத்து நடை கொண்ட ஜனநாயகன் 'தினமலர்'
/
எளிமையான எழுத்து நடை கொண்ட ஜனநாயகன் 'தினமலர்'
PUBLISHED ON : ஜன 04, 2026 03:06 AM

'வேர் என்பதை கீழ் நோக்கி வளரும் மரம்' என்று சிந்திப்பவன் நான். டி.வி.ராமசுப்பையர் எனும் வேர் நாளுக்கு நாள் ஆற்றல்மிக்க வகையில் வளர்ந்து கொண்டிருப்பதாக 'தினமலர்' புரட்டும் ஒவ்வொரு காலையிலும் என்னால் உணர முடிகிறது.
இத்தகைய அர்த்தமுள்ள வளர்ச்சியின் பெரும் அற்புதமே இந்த பவள விழா. 'தமிழர்களின் நியாயமான குறைகளுக்கு பரிகாரம் தேடுவது தினமலர் நாளிதழின் சீரிய நோக்கங்களில் ஒன்றாகும்' என்று கொள்கை பிரகடனமாய் தன் நாளிதழ் துவக்க விழா மேடையில் அறிவித்தவர் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர்.
கொண்ட கொள்கையில் இன்றுவரை தடம் புரளாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது அவர் கண்ட தினமலர். நாட்டில் என்னென்ன நிகழ்கின்றனவோ அதனை செய்தியாகத் தருவது நாளிதழின் பணி எனினும், அச்செய்திகளை மக்கள் நலன் சார்ந்த தொனியில் தருவது தினமலர் பாணி.
சிறிய விஷயம்தான்; 'இந்த இடத்தில் சாலை சரியில்லை... இத்தனை நாட்களாக இப்படித்தான் இருக்கிறது' என்பதோடு ஒரு செய்தியை சுருக்கிவிடாமல், 'இதனால் மக்கள் சந்தித்த பாதிப்பு என்ன; என்னென்ன விதமான மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் இது ஏற்படுத்தும்' என்றெல்லாம் செய்தியை விவரித்து, மக்கள் நலனில் தான் கொண்டிருக்கும் அக்கறையை உணர்த்துவது தினமலர்.
'அவசர உலகம்தானே; உண்மையை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்; வாசகர்களால் அவை கண்டுகொள்ளப்படாது' எனும் பணி அலட்சியத்தை, தினமலர் நாளிதழின் எந்த ஒரு பக்கமும் பிரதிபலிப்பதில்லை. 'உண்மையை உள்ளது உள்ளபடி சொல்வதுதான் அறம்' என இன்றும் தினமலர் நம்புகிறது.
'ஜன சமூகத்திற்கு தீங்கு இழைப்போர் யாராக இருப்பினும் அவர்களை வன்மையாக கண்டிப்பதில் தினமலர் சற்றும் தயங்காது. தமிழினத்திற்கு துரோகம் செய்யும் கோடாலி காம்புகளை முறியடிப்பதில் தினமலர் முன்னணியில் நின்று பணியாற்றும்' என்று தினமலர் நாளிதழின் துவக்க கால தலையங்கங்கள் சொன்னது இப்போதும் என் நினைவில் இருக்கிறது; இதற்கு முக்கிய காரணம்... இதனை அன்றாடம் எனக்கு நினைவூட்டும் 'டீ கடை பெஞ்ச்' பகுதி.
இதனைச் செய்யாது பிறகென்ன அது ஊடகம்; இதைச் செய்வதுதான் ஊடகம்; இப்படிச் செய்தால் தான் அது ஊடகம்; என்னைப் பொறுத்தவரை அச்சு வடிவிலும், தற்போது டிஜிட்டல் வடிவிலும் தன்னிகரற்று ஊடக அறம் போற்றுகிறது தினமலர்.
நினைத்துப் பார்க்கிறேன்... குற்றவியல் வழக்கறிஞரான பாளை சண்முகம் அவர்களின் அந்த குறிப்பை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்...
அது 1972, டிசம்பர் மாதம். திருநெல்வேலியில் போலீசுக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல். ஒரு கட்டத்தில் தினமலர் அலுவலகத்தை தாக்க ஆயுதப்படை போலீஸ் கிளம்புகிறது. விஷயம் அறிந்து அலுவலக ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, எதிர்வரும் ஆபத்தை எதிர்கொள்ள தனியொரு மனிதராக காத்திருக்கிறார் டி.வி.ராமசுப்பையர்.
முன்கூட்டியே எச்சரிக்க வந்த தொலைபேசி அழைப்பிற்கு அன்று அவர் சொன்ன பதில் இதுதான்...
'உண்மையைச் சொன்னதற்காக தண்டிக்கப்படுவோமானால் ஏற்க வேண்டியதுதான்; நடப்பது நடக்கட்டும்; பார்த்துக் கொள்கிறேன்'.
அன்று உண்மை வென்றது. ஆர்.டி.ஓ., மூலம் அந்த தாக்குதல் முயற்சி நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்டது.
இரும்பு மனம் கொண்ட இம்மனிதரால் துவக்கப்பட்ட தினமலர் நாளிதழ், இன்றுவரையிலும் எதற்கும் அஞ்சியதாய் அதன் செய்திகளில் நான் உணர்ந்ததில்லை. காலத்திற்கு தகுந்தவாறு தன்னை பலவாறு புதுப்பித்துக் கொண்டு நாளிதழ் உலகில் படிப்படியாய் முன்னேற்றம் கண்டு வருகிறது.
இன்று வாசிப்பு பழக்கம் இல்லாத ஒரு இளைஞன், 'நான் வாசிக்க தினமலர் நாளிதழில் என்ன இருக்கிறது' என்று கேட்பானேயானால், 'ஒருமுறை வாசித்துப் பார்த்து, என்ன இல்லை என்று சொல்' என்று அவனிடம் நாளிதழ் நீட்டினால், 'மவுனம்' மட்டுமே அவன் பதிலாக இருக்கும். ஆனால், நிச்சயம் அவன் தினமலர் வாசகன் ஆகியிருப்பான்.
'ராமசுப்பையர் எளிமையான சுபாவம் உள்ள பலமான மனிதர்' என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். அவர் கண்டறிந்த தினமலர் நாளிதழ் 'எளிமையான எழுத்துநடை கொண்ட பலமான ஜனநாயகன்' என்று ஆணித்தரமாக நான் சொல்கிறேன்; வாழ்த்துகிறேன். நிறைவாக ஒன்று...
'வேர் என்பது டி.வி.ஆர்.,' எனச் சொல்லிவிட்டேன்; 'அந்த வேர் பற்றியிருக்கும் மண் எது' எனச் சொல்லவில்லையே; அது... என் போன்ற தமிழ் மக்களின் மனம்.
அன்புடன்,
டாக்டர் பழனி ஜி.பெரியசாமி,
தலைவர், லீ ராயல் மெரிடியன் மற்றும் பிஜிபி குழுமம்

