/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
சமூக மாற்றத்திற்கு வித்திட்ட அமரர் கிருஷ்ணமூர்த்தி!
/
சமூக மாற்றத்திற்கு வித்திட்ட அமரர் கிருஷ்ணமூர்த்தி!
சமூக மாற்றத்திற்கு வித்திட்ட அமரர் கிருஷ்ணமூர்த்தி!
சமூக மாற்றத்திற்கு வித்திட்ட அமரர் கிருஷ்ணமூர்த்தி!
PUBLISHED ON : அக் 24, 2025 12:00 AM

கடும் போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், ஒரு நிறுவனம், 75 ஆண்டுகள் பயணிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. 'தினமலர்' நாளிதழ் அதை சாதித்து காட்டி இருக்கிறது. அதுவும், 'தினசரி படிக்கிற பழக்கம் குறைந்து விட்டது. இனி, நாளிதழ்கள் விற்பது கடினம்...' என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருக்கிற கால கட்டத்தில், தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தினமலர் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது என்பது பெருமைப்படக்கூடிய விஷயம்.
இந்த 75 ஆண்டுகளில், கிட்டத்தட்ட அரை நுாற்றாண்டாக நான் 'தினமலர்' உடன் இணைந்து பயணித்து இருக்கிறேன் என்பது, எனக்கு பெருமை!
புகழ்பெற்ற பகுதியான 'டீக்கடை பெஞ்ச்' வாயிலாக தான்! 'தினமலர்' எனக்கு அறிமுகம் ஆனது.
என் சொந்த ஊர், பெரம்பலுார் மாவட்டத்தின், மேலப்புலியூர் கிராமத்திற்கு அருகே உள்ள குரும்பலுார். அங்கு, 1975ல், அரசு உயர்நிலை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, பள்ளிக்கு அருகில் உள்ள டீக்கடை பெஞ்சில் 'தினமலர்' நாளிதழ் இருக்கும். நாங்கள், நண்பர்களாக இணைந்து, அந்த டீக்கடை பெஞ்சில் 'தினமலர்' வாசிப்போம்.
அப்போது, எங்களுக்கு 'தினமலர்' மீதான ஈர்ப்பு வர காரணம், எஸ்.எஸ்.எல்.சி., மாதிரி வினா-விடை. அது பிளஸ் 2 அறிமுகம் ஆவதற்கு முன்பான கால கட்டம். 11வது ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பரீட்சை தான் பள்ளி அளவில் மிகப்பெரிய பொதுத்தேர்வு. தேர்வில் இருந்த ஆறு பாடங்களுக்கும் மாதிரி வினா-விடை வரும். அதை, பாடப்புத்தகத்தை விட அதிக கவனமாக வாசிப்போம். காரணம், 'தினமலர் மாதிரி வினா-விடைகள் பெரும்பகுதி அப்படியே பொதுத்தேர்வில் வருகின்றன' என்ற, நம்பிக்கை மாணவர்கள் மத்தியில் இருந்தது.
அப்படி துவங்கிய என் 'தினமலர்' உறவு; பிற்காலத்தில், கல்வியாளராக, 'ஜெயித்துக்காட்டுவோம், வழிகாட்டி, உங்களால் முடியும்' என்று 'தினமலர்' நடத்தும் புகழ்பெற்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் வாயிலாக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது.
இன்று, தமிழில் அனேக ஊடகங்களும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளை நடத்தினாலும், அவற்றுக்கு 'தினமலர்' தான் முன்னோடி என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதற்கு விதை போட்டது, 'தினமலர்' ஆசிரியர் மறைந்த இரா.கிருஷ்ணமூர்த்தி தான்.
நேரடியாக களத்தில் இறங்கி சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதில், அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கு, கல்வியே சிறந்த கருவி என்று நம்பினார். சமூகத்தின் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வி சென்றடைந்தால், சமூக மாற்றம் தானாக நடக்கும் என்பது அவர் கூற்று. அதனால் தான், கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளை இடைவிடாது நடத்தி வந்தார்.
பல நேரங்களில் அவரும் நிகழ்ச்சி அரங்கத்திற்கு வருவார். அப்போது, அவர் அருகே அமர்ந்து உரையாட வாய்ப்பு அமையும். அப்படி ஒருநாள் திருவள்ளூரில் ஒரு திருமண மண்டபத்தில், 'ஜெயித்துக்காட்டுவோம்' நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, நரிக்குறவர் தன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், மகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். அதைப் பார்த்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நெகிழ்ந்து, 'இப்ப தான் எனக்கு சந்தோஷமா இருக்கு. நான் எதுக்காக இந்த நிகழ்ச்சியை தொடங்கினேனோ, அந்த நோக்கம் நிறைவேறியாச்சு... இவங்க படிச்சு மேல வந்துட்டா எனக்கு அதுவே போதும்...' என்று கூறினார். உண்மையிலேயே, அவர் எந்த அளவுக்கு உளப்பூர்வமான ஈடுபாட்டோடு அந்த நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார் என்பது அப்போது எனக்கு புரிந்தது.
இந்த அனுபவங்களை இப்போது சொல்வதற்கு காரணம், 'தினமலர்' வெறுமனே செய்திகளை தரும் ஒரு கருவியாக நின்று விடாமல், சமூக மாற்றத்திற்கான பல்வேறு நிகழ்வுகளை நேரடியாக இன்றும் களத்தில் இறங்கி வழங்கி வருவது தான் அதன் வெற்றிக்கு அடிப்படை. இந்த அஸ்திவாரம் இருக்கும்வரை, 75 ஆண்டுகள் மட்டுமல்ல, இன்னும் 100 ஆண்டுகள் தினமலர் சேவை கண்டிப்பாக தொடரும். அதில் ஒரு அணிலாக என் சேவையும் தொடரும்!
அன்புடன்,
ரமேஷ் பிரபா
கல்வியாளர், ஊடகவியலாளர்

