/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
ஆன்மிக மலர் மக்களை நல்வழிப்படுத்துகிறது
/
ஆன்மிக மலர் மக்களை நல்வழிப்படுத்துகிறது
PUBLISHED ON : அக் 08, 2025 12:00 AM

'தினமலர்' நாளிதழ் 1951ம் ஆண்டு தெய்வத்திரு.டி.வி.ராமசுப்பையரால் aதிருவனந்தபுரத்தில் துவங்கப்பட்டு, 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்து, பவள விழா கொண்டாடி வருவது மகிழ்ச்சி. வாழ்த்துகள்!
மக்களாட்சியின் நான்கு துாண்களில் பத்திரிகையும், செய்திப்பகிர்வும் ஒரு துாணாக விளங்கி வருகிறது. இதன் பணி நாளிதழ் தர்மத்தைப் பிறழாமல் கடைபிடித்து, செய்திகளை வழங்குவதோடு, மக்களின் அறிவுத் தேடலுக்கும், வாசிப்பு பழக்கத்துக்கும் உதவி புரிதலாகும். அரசுக்கும், மக்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தி, மக்களை ஒருமுகப்படுத்தி நாட்டுப்பற்றுடைய நல்ல குடிமக்களை உருவாக்கும் பணியைச் செய்வதே, ஒரு நல்ல நாளேட்டின் தலையாய நோக்கம்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களின் பிரச்னைகளை ஆய்ந்து உதவ, நெல்லையில் முகிழ்ந்த மொக்கு இன்று சென்னை, புதுச்சேரி, வேலுார், கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, புதுச்சேரி, பெங்களூரு என பெரிய நகர்களில் மலர்ந்து, பொழுது புலரும் முன் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் கரங்களில் தவழ்ந்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை நிகழ்ந்த, நாட்டு நடப்பு் செய்திகளை அறியச் செய்வது நாளேட்டுக்கு உகந்த நல்ல இலக்கணம். இலக்குடைய பணி. எளிய தமிழ்மொழியில் வெளியிட்டு அனைவராலும் புரிந்து படிக்கத் துாண்டும் அச்சு வடிவம் கொண்ட நாளேடு 'தினமலர்'.
நடுநிலையான அணுகுமுறையுடன், சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினரும் விரும்பிப் படித்துப் பயனுறும் எண்ணத்தில், இலவச இணைப்புகளாக சிறுவர் மலர், ஆன்மிக மலர், வாரமலர் என வழங்கி, வாசகர்களின் வட்டாரத்தை வசப்படுத்தியும், விரிவாக்கியும் கருத்துகளை எட்டச் செய்வது, 'தினமலர்' நாளிதழின் சிறப்பான பணி. தவிர, கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண்மை, மருத்துவம், தொழில், வணிகம், பட்டம், குறுக்கெழுத்து புதிர், நிதி, விளையாட்டு செய்திகள், அக்கம் பக்கம், பக்கவாத்தியம், டீ கடை பெஞ்ச், துணுக்குகள் என அனைத்து தரப்பு வாசகர்களையும் தன் வயமாக்கி, பயனுள்ள செய்திகளை பகிர்ந்து அளிப்பது மற்றுமொரு சிறப்பு.
ஆன்மிகத் துறையில் 'தினமலர்' ஆற்றும் பணி பாராட்டத்தக்கது. தமிழகத் திருக்கோவில்களில் எங்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்வுகள் நடைபெற்றாலும், புகைப்படங்களுடன் அந்நிகழ்வுகளை விரிவாகவும், விளக்கமாகவும் வெளியிட்டு அடியார்களுக்கும், ஆன்மிக வாசகர்களுக்கும் தாங்கள் நேரடியாக இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டது போன்ற உணர்வை நல்குகிறது. அத்திருக்கோவில்களின் தல வரலாறு, அதன் சிறப்புகளையும் கட்டுரைகளாக வெளியிடுவது 'தினமலர்' ஆற்றும் ஆன்மிக பணிக்கு ஓர் எடுத்துக்காட்டு.
வெள்ளிதோறும் வெளியிடப்படும் ஆன்மிக மலர் மக்களை நல்வழிப்படுத்தி, அவர்கள் ஆன்மிகத்தில் நாட்டம் வளர உதவுகிறது. மக்கள் பணி செய்து இன்னும் பல நுாற்றாண்டுகள் கடந்து எதிர்வரும் தலைமுறையினருக்கும், ஒப்பற்ற பணியாற்றி சிறக்க, குருவருளையும் திருவருளையும் சிந்தித்து எம் வாழ்த்துகளை மகிழ்வுடன் பதிவிடுகிறோம்.
அன்புடன்
குமரகுருபர சுவாமிகள்
மடாதிபதி, சிரவணபுரம்
கவுமார மடாலயம்.