/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
'சொல்கிறார்கள்' பகுதியை விரும்பி படிப்பேன்
/
'சொல்கிறார்கள்' பகுதியை விரும்பி படிப்பேன்
PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM

சென்னையில் நான் வசித்து வரும் பதினாரு ஆண்டுகளாக, 'தினமலர்' நாளிதழின் வாசகனாக உள்ளேன். பிரசுரமாகும் ஒவ்வொரு கருத்தையும் தெளிவாக, உறுதியாக, துணிவாக, வரம்பு மீறாத கண்ணியத்துடனும் எடுத்துச் சொல்லும், இந்த நாளிதழின் மாண்பு, எனக்கு மிகவும் பிடித்தது. அரசு அதிகாரிகள், ஊழியர்களின் அவலங்களை, நகைச்சுவையுடன் வெளிச்சம் போட்டு காட்டும், 'டீ கடை பெஞ்ச்' சிறிது முறுமுறுப்பு செய்தாலும், பொறுப்புணர்ந்து ஒரு மன வலியுடன் எழுதப்படுகிறது என்பது புரிகிறது. படிப்பவர்களிடமும் வருத்தம் கலந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை.
தினமலர் நாளிதழில், நான் மிகவும் விரும்பி படிப்பது, நடுப்பக்கத்தில் அன்றாடம் வரும் 'சொல்கிறார்கள்' என்ற பகுதி. தளராத மனதுடன், விடாது போராடி, தான் எடுத்த காரியங்களில் வெற்றி பெறும், ஆண்கள் மற்றும் பெண்களின் சுயசரிதை, பலருக்கு உந்துகோலாக அமையும் என்பது நிச்சயம். இதேபோன்று, ஞாயிறுதோறும் தினமலர் நாளிதழுக்கு இணைப்பாக வழங்கப்படும் வாரமலரில் இடம்பெறும், 'இது உங்கள் இடம்' பகுதியில் வெளியாகும் கடிதங்களும், மாற்றி யோசித்து, புதிய யுக்தியின் வழியே வெற்றி அடைபவர்கள், ஒரு சமூக பிரக்ஞையுடன் மற்றவர்கள் வாழ்வில் மாற்றங்களுக்கு அடிகோலியவர்களின் முயற்சிகள், வருங்கால சமுதாயத்துக்கு உபயோகமானவை என்பதில் துளியும் ஐயமில்லை.
நான் தலைவராக இருக்கும் விவேகானந்தா கல்வி குழுமத்தின் பள்ளிகளில், இந்த இரண்டு பகுதிகளில் இருந்தும் சொல்லப்பட்ட நிகழ்வுகளை எடுத்துக்கூறி, மாணவ - மாணவியர் சிந்திக்கவும், செயல்படவும், எமது ஆசிரியர்கள் ஊக்குவிக்கின்றனர். இது எனக்கு பெருமையூட்டுகிறது. அதற்காக, தினமலருக்கு எனது பிரத்யேக நன்றி. 75ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த நாளிதழின் பணி நுாறாண்டுகளுக்கு மேலும் தொடர வேண்டும் என்பது என் அவா. எல்லாம் வல்ல இறைவனிடம், என் பிராத்தனையும் கூட.
இப்படிக்கு,
நீ.கோபாலசாமி,
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்