/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தேரம்பாளையத்தில் பஸ்களை நிறுத்த நடவடிக்கை
/
தேரம்பாளையத்தில் பஸ்களை நிறுத்த நடவடிக்கை
PUBLISHED ON : ஆக 18, 2024 12:00 AM

மேட்டுப்பாளையம்:தினமலர் செய்தி எதிரொலியால் தேரம்பாளையத்தில், அனைத்து ரூட் பஸ்கள் நிறுத்த, அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளாதி ஊராட்சிக்கு உட்பட்ட தேரம்பாளையம், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் அமைந்துள்ளது. தேரம்பாளையத்தை சுற்றி, 10க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன.
இங்கிருந்து தினமும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர், பள்ளி கல்லூரிகளுக்கு செல்கின்றனர். திருப்பூர், அவிநாசி பனியன் கம்பெனிகளுக்கும், கோவைக்கும் ஏராளமானவர்கள் வேலைக்கு செல்கின்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே மேட்டுப்பாளையத்தில் இருந்து, டவுன் பஸ் இயக்கப்படுகிறது. 15 நிமிடத்திற்கு ஒருமுறை ரூட் பஸ்கள் இவ்வழியாக செல்கின்றன. ஆனால் ரூட் பஸ்கள் தேரம்பாளையத்தில் நிற்பதில்லை. வேலைக்கு செல்பவர்களும், கல்லூரி செல்லும் மாணவர்களும், ரூட் பஸ்கள் இங்கு நிற்காததால், அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், உடனடியாக தேரம்பாளையத்தில் அனைத்து ரூட் பஸ்களையும் நிறுத்த, நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையடுத்து, அரசு போக்குவரத்துக்கழக சூப்பிரண்டு மோகன்குமார், தானே தேரம்பாளையம் வந்து பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டார். அவ்வழியாக வரும் அனைத்து அரசு ரூட் பஸ்களையும் நிறுத்தினார். இங்கு கட்டாயம் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும் என டிரைவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகத்தில் டிரைவர், கண்டக்டர்கள் பார்வையில் படும்படி, நோட்டீஸ் போர்டில் அறிவிப்பு வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து, ஊராட்சி தலைவர் பூபதி குமரேசன் கூறுகையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ரூட் பஸ்களை நிறுத்த ஏற்பாடு செய்த, அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தினருக்கு, தேரம்பாளையம் மக்களின் சார்பில், நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், என்றார்.

