/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
14ம் தேதி முதல் கலெக்டர் அலுவலகத்திலேயே முகாம் : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
/
14ம் தேதி முதல் கலெக்டர் அலுவலகத்திலேயே முகாம் : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
14ம் தேதி முதல் கலெக்டர் அலுவலகத்திலேயே முகாம் : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
14ம் தேதி முதல் கலெக்டர் அலுவலகத்திலேயே முகாம் : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
PUBLISHED ON : நவ 07, 2025 12:00 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட அளவிலான அடையாள அட்டை வழங்குவதற்காக, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைதோறும், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வந்தது. அரசு உத்தரவுப்படி, கடந்த அக். மாதம், இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது.
வாரந்தோறும் புதன்கிழமை கைகால் பாதித்த, பார்வை திறன், செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கும், வெள்ளிக்கிழமை தோறும், மனநலம் பாதித்தோருக்கும் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுவந்த முகாம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு வந்தது.
அதன்படி, அக். 8ம் தேதி முதல், மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வந்தது. கடும் இட நெருக்கடி காரணமாக, மாற்றுத்திறனாளிகளும், உடன் வரும் உறவினர்களும், கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முகாம் நடத்தும் அறை அருகே போதிய குடிநீர் வசதி இல்லை. வீல் சேர், சாய்தளம், மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கான கழிப்பிட வசதிகள் இல்லை.
மருத்துவ பரிசோதைனை முகாமில், மாற்றுத்திறனாளிகள் படும் துயரம் தொடர்பாக. கடந்த அக். 13, 14, 16ம் தேதியில், 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. மருத்துவ பரிசோதனை முகாமை மீண்டும் கலெக்டர் அலுவலகத்திலேயே நடத்த வேண்டும். அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும், ஒரே நாளில் முகாம் நடத்த வேண்டும் என, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனுவும் அளித்தனர்.
'தினமலர்' செய்தி எதிரொலியாக, அடையாள அட்டைக்கான மருத்துவ பரிசோதனை முகாமை, வரும் 14ம் தேதி முதல், வழக்கம்போல் கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாரம் இரண்டு நாட்களுக்கு பதிலாக, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் முகாம் நடத்தப்பட உள்ளது.
இன்று மட்டும்...
ஏற்கனவே, திட்டமிடப்பட்டதால், மாற்றுத்திறனாளிகளுக்கு, இந்த வாரத்துக்கான மருத்துவ பரிசோதனை முகாம் மட்டும், இன்று, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நடத்தப்படுகிறது. வரும் 14 ம் தேதி முதல், கலெக்டர் அலுவலக அரங்கில் முகாம் நடைபெற உள்ளது.

