/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி அரசு ஆபீஸ்களுக்கு தனி மின்பாதை அடிக்கடி மின்தடை பிரச்னைக்கு தீர்வு
/
தினமலர் செய்தி எதிரொலி அரசு ஆபீஸ்களுக்கு தனி மின்பாதை அடிக்கடி மின்தடை பிரச்னைக்கு தீர்வு
தினமலர் செய்தி எதிரொலி அரசு ஆபீஸ்களுக்கு தனி மின்பாதை அடிக்கடி மின்தடை பிரச்னைக்கு தீர்வு
தினமலர் செய்தி எதிரொலி அரசு ஆபீஸ்களுக்கு தனி மின்பாதை அடிக்கடி மின்தடை பிரச்னைக்கு தீர்வு
PUBLISHED ON : டிச 09, 2024 12:00 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நந்திவரம் அரசு மருத்துவமனை, நந்திவரம் மற்றும் கூடுவாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகம், கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வண்டலுார் தாலுகா அலுவலகம், உதவி கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பேருந்து நிலையத்தை சுற்றி அமைந்துள்ளன.
சமீபத்தில், 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த கனமழையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின் வினியோகம் தடை செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் புயல் மழை பாதிப்பு பணி மேற்கொண்ட வருவாய்த் துறையினர், நகராட்சி துறையினர், காவல் துறையினர், மின்சாரம் இல்லாததால் பணி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.
மேலும், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களும் தங்களது மொபைல் போன்களை 'சார்ஜ்' செய்ய முடியாமல், மிகுந்த சிரமம் அடைந்தனர்.
கையில் மொபைல் போன் இருந்தும், மின் வினியோகம் இல்லாததால், தொலைத்தொடர்பு வெகுவாக துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் எதிரொலியாக, மறைமலைநகர் மின்வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்து, கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தில் உள்ள டவுன் மின் இணைப்பில் இருந்து, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக மின் வினியோகம் கிடைக்கும் வகையில், ஐந்து புதிய மின் கம்பங்கள் நட்டு, தனி பாதையில் மின் இணைப்பு வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து, கூடுவாஞ்சேரி உதவி செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி கூறியதாவது:
தற்போது அரசு அலுவலகங்களுக்கு, காமராஜபுரம் மற்றும் ஸ்ரீராம் சங்கரி அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள மின் மாற்றி வாயிலாக, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அது வெகு தொலைவில் இருந்து வருவதால், மழை நேரத்தில் பிரச்னை ஏற்படுகிறது. அதனால் மின்தடை ஏற்பட்டு, அரசு அலுவலகங்களில் பணிகள் மேற்கொள்ள முடியாமல் போகிறது.
அதை கருத்தில் கொண்டு, கூடுவாஞ்சேரி டவுன் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து, நேரடியாக அரசு அலுவலகங்களுக்கு மின் பாதை அமைத்து, தடையின்றி சீரான மின் வினியோகம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் அரசு அலுவலகங்களில் மின்தடை ஏற்படாதவாறு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.