/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி : வடபழனி மேம்பால சர்வீஸ் சாலை சீரமைப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி : வடபழனி மேம்பால சர்வீஸ் சாலை சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி : வடபழனி மேம்பால சர்வீஸ் சாலை சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி : வடபழனி மேம்பால சர்வீஸ் சாலை சீரமைப்பு
PUBLISHED ON : பிப் 10, 2025 12:00 AM
வடபழனி:நம் நாளிதழ் செய்தியை அடுத்து, குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு சவால் விட்ட, வடபழனி மேம்பால சர்வீஸ் சாலையில், தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
வடபழனி 100 அடி சாலை மற்றும் ஆற்காடு சாலை சந்திப்பில், நெரிசலை குறைக்க வசதியாக, வடபழனி மேம்பாலம், 2016ம் ஆண்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த 100 அடி சாலை வழியாக, புழலில் இருந்து வரும் குடிநீர் குழாய் செல்கிறது.
வடபழனி மேம்பால பணிகளின்போது, இந்த குடிநீர் குழாய் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால், மேம்பாலத்தின் சாய்தளத்தில் குடிநீர் குழாய்கள் சிக்கி கொண்டன. கடந்த ஆண்டு நவம்பரில், இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் கசிந்தது. இதனால், மேம்பாலத்தின் சாய்தள உள்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.
மேம்பாலத்தின் சாய் தளத்தை வலுப்படுத்த, 'க்ரூட்டிங்' முறையில் எம்.சாண்ட் மற்றும் சிமென்ட் கலவையை, மேம்பால சாய்தள தடுப்பு சுவர் இடைவெளி வழியாக செலுத்தி சீர் செய்யப்பட்டது.
இதையடுத்து, 300 மீட்டர் துாரத்திற்கு குடிநீர் குழாயை மாற்றி அமைக்கும் பணியில் குடிநீர் வாரியம் ஈடுபட்டு வருகிறது. இதனால், வடபழனியில் இருந்து அரும்பாக்கம் நோக்கி செல்லும் வடபழனி சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக மாறி இருந்தது.
வானகங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அருகே உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் கூட சென்று வர முடியாமல் தடுமாறின.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, குடிநீர் வாரிய பணிகள் முடிந்த பகுதியில், தார் சாலை போடப்பட்டு, சீரமைக்கப்பட்டு உள்ளது. மற்ற பகுதிகளிலும் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடித்து, சாலையை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

