PUBLISHED ON : மார் 27, 2026 09:01 AM

வேலுார்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சொர்க்கால்பேட்டை மலை அடிவாரத்தில், இருளர் குடும்பத்தினர் வசிக்கும் பகுதிக்கு தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கப்பட்டது.
வேலுார் மாவட்டம், சொர்க்கால்பேட்டை மலை அடிவாரத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கி ஐந்து ஆண்டுகளாகியும், சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை, மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தரவில்லை.
இதில், அதிருப்தி அடைந்த, 47 இருளர் குடும்பத்தினர், சட்டசபை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர்.
இதுகுறித்து, 'நம் நாளிதழில்' மார்ச், 22ல் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலி யாக, மாவட்ட நிர்வாகம் சார்பில், உடனடியாக அப்பகுதிக்கு, தற்காலிக மின் இணைப்பு வழங்கப்பட்டது. நிரந்தர இணைப்பு வழங்க, அப்பகுதியில், 10 மின் கம்பங்கள் அமைக்கும் பணியை, மின்வாரிய அதிகாரிகள் துவக்கினர்.
இருளர் குடும்பத்தினர் கூறுகையில், 'மின்சார வசதியுடன், தினசரி லாரிகளில், குடிநீர் வினியோகமும் செய்யப்படுகிறது. சாலை, இலவச வீடு உள்ளிட்ட கோரிக்கைகளை, படிப்படியாக நிறைவேற்றுவதாக, அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். எங்கள் பிள்ளைகள், முதல் முறையாக, மின்சார விளக்கில் படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்.
