PUBLISHED ON : அக் 08, 2026 12:00 AM

காரைக்குடிக்கு ரயில் வருமா?
டாக்டர் பொன்னு சேதுராஜ், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1930, ஜூலை 1ம் தேதி காரைக்குடி ரயில் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது-------------------------------------------------------------------.
இதோ... 96 ஆண்டுகள் முடிந்து விட்டன. இதுவரை இரண்டு முறை மட்டுமே சர்வே நடந்து உள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியில், கோட்டையூர்--- - பிள்ளையார்பட்டி - --தேவகோட்டை-- - மானாமதுரை - வழியாக, மதுரை வரை சர்வே நடந்தது. மலை குன்றுகள் இருக்கின்றன என்று காரணம் காட்டினர். அதேநேரம், சில ஆண்டுகளில், மலை குன்றுகளை உடைத்து நெடுஞ்சாலை போடப்பட்டது.
புதிதாக அமைக்கப்பட்ட சாலை அருகே கூட ரயில்வே லைன் போடலாம் என்று அதிகாரிகள் பரிந்துரை செய்த போதும், திட்டம் கைவிடப்பட்டது.
கடந்த தி.மு.க., ஆட்சியில் காரைக்குடியிலிருந்து திருப்பத்துார் - புதுக்கோட்டை, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு ரயில் பாதை அமைக்க, 87 கி.மீ., ஆய்வு செய்யப்பட்டு, ரயில்வே நிர்வாகத்திற்கும் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த இரண்டு வழிகளில் ஏதாவது ஒரு வழியில், காரைக்குடியில் இருந்து மதுரைக்கு ரயில் சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறோம்; ஆனாலும் பலன் இல்லை.
காரைக்குடி - --மதுரை ரயில் நேரடி சேவைகள் கிடைக்கும் பட்சத்தில், காரைக்குடி மற்றும் அதன் சுற்று பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டி, அரியக்குடி, தென் திருப்பதி, பைரவர் கோவில், குன்றக்குடி முருகன் கோவில் என ஏராளமான புகழ்பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு, மக்கள் எளிதில் வந்து செல்ல முடியும்.
வணிகம், --கல்வி, மருத்துவம், சுற்றுலா வாயிலாக அரசுக்கு வருமானம் கிடைக்கும்.
மத்திய - மாநில அரசுகள் மனம் வைத்தால், மக்களின் மனம் மகிழும்.
-ரயில்வே துறை காரைக்குடியை கவனத்தில் கொள்ளுமா?
உழைப்பை உறிஞ்சும் இலவசம்!
எஸ்.உதயம் ராம், பெரம்பூர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகளால் இலவசம் எனும் தொற்றுநோய் வேகமாக பரவி, மக்களின் உழைக்கும் ஆர்வத்தை முடக்கி வருகிறது.
பல்பொடி, பலப்பம், சிலேட்டு, சீருடை, காலணி, மதிய உணவு, நோட்டு புத்தகங்கள் என்று ஏழை பள்ளி மாணவர்களுக்காக இலவசம் தொடங்கப்பட்டதில் ஒரு நியாயம் இருந்தது .
அதுவே சைக்கிள், இலவச பஸ் பயணம், தாலிக்கு தங்கம், தாய்மாமன், அண்ணன் சீர் என்று விரிந்து வருவதைப் பார்க்கும் போது, வருங்காலத்தில் முதலிரவுக்கு கட்டில் - மெத்தை, பால் - பழம் தலையணை என்றெல்லாம் பரந்து விரிந்து விடுமோ என்று பயமாக உள்ளது.
ஏனெனில், பிறக்கும்போதே விரலில் இலவசத்தோடு தான் அடுத்த தலைமுறையினர் வருகின்றனர் எனும் போது, எதிர்கலத்தில் இந்த இலவசத்தின் எல்லையும் அதன் வரம்பை மீறி உச்சத்தை தொடத்தானே செய்யும்?
உலக நாட்டாண்மையான அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட, இலவச திட்டங்களை அறிவிக்கும் அளவிற்கு, இந்தியாவை கடந்து அமெரிக்கா வரை இலவச வியாதி பரவியிருக்கிறது என்றால், அதன் மகிமையை என்னவென்பது?
குண்டு குழியில்லாத சாலைகள், சுத்தமான குடிநீர், எங்கும் தேங்கி நிற்காத கழிவுநீர் கால்வாய்கள், உயர் தரத்துடன் கூடிய மருத்துவமனைகள், சிறப்பான கல்வி முறை, தரமான கட்டமைப்புள்ள கல்விக் கூடங்கள், படித்து முடித்தவுடன் வேலை, லஞ்சம் - ஊழல் அற்ற நிர்வாகம்...
எந்த நாட்டு மக்களாக இருந்தாலும், தாங்கள் தேர்ந்தெடுத்த அரசிடம் இவற்றைத் தான் எதிர்பார்ப்பரே தவிர, இலவசங்களை அல்ல!
அமெரிக்கா வீசிய அணுகுண்டு வீச்சால் தரைமட்டமாகி, புல் பூண்டு கூட முளைக்காது என்று பேசப்பட்ட ஜப்பான், இன்று வல்லரசு நாடாக வளர்ந்திருப்பதற்குக் காரணம், பிறந்த குழந்தைக்கு கூட உழைப்பின் அருமையை அவர்கள் உணர்த்திக் கொண்டு இருப்பதால் தான்!
நாமோ உலகத்திலேயே அதிக மக்கள் வளம் நிறைந்த நாடாக இருந்தும், இன்னும் வளரும் நிலையிலேயே இருக்கிறோம்; ஒவ்வொரு மாநிலங்களும் கடன் வாங்கி, நிர்வாகம் செய்கின்றன என்றால், அதற்கு காரணம், இலவசம்!
மக்களின் உழைப்பை உறிஞ்சி பெறப்படும் வரிப்பணம், மக்களின் உயர்வுக்காக பயன்படாமல், அவர்களின் உழைப்பை முடக்கி, இலவச போதையில் ஆழ்த்துவது தொடர்ந்தால், வெகு விரைவிலேயே இது சோம்பேறிகளின் நாடாக மாறிவிடும்!
