PUBLISHED ON : அக் 08, 2026 12:00 AM

எஸ்.ரேவதி பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ஆண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பெண்களை மதிக்க, சமமாக நடத்த கற்று கொடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர பிரதேச அரசு, பள்ளி பாடத்திட்டங்களில் பாலின சமநிலையை கொண்டு வந்துள்ளது.
ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான பாட புத்தகங்களில், பெண்கள் வீட்டு வேலைகள் செய்வோராகவும், ஆண்கள் வெளி வேலைகள் செய்வோராகவும் சித்தரிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது, ஆண்களும், பெண்களும் பணிகளை சமமாக பகிர்ந்து கொள்வது போல் பாடங்கள் மாற்றப்பட்டுள்ளன.
சிறு வயதிலிருந்தே பெண்கள் மீதான மரியாதையை வளர்ப்பதற்கு, பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார், அம்மாநில கல்வி அமைச்சர் நாரா லோகேஷ்.
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்பது போல், பள்ளிப் பருவத்தில் விதைக்கப்படும் இதுபோன்ற கருத்துக்கள் தான், வளர்ந்த பின்பும் அவர்களிடம் எதிரொலிக்கும். அவ்வகையில், இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த ஆந்திர அரசின் கல்வித் துறையை பாராட்டலாம்.
தமிழக பாடப் புத்தகங்களிலும், அம்மா என்றாலே சமையலறையில் வேலை செய்து கொண்டிருப்பது போன்றும், அப்பா அலுவலகம் செல்வதைப் போன்றும் தான், படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
ஒரு காலத்தில் அதுபோன்று ஒரு நிலை இருந்தது தான்; ஆனால், தற்போது காலம் முற்றிலுமாக மாறி விட்ட நிலையில், இப்போதும் பெண்கள் என்றால் சமையல் அறையும், ஆண்கள் மட்டுமே வெளி வேலைகள் பார்ப்பது போன்றும் பாலின வேறுபாடுகளை திணிப்பது சரியா?
பாலின சமத்துவத்தின் அவசியத்தை ஆந்திரா உணர்ந்து விட்டது; தமிழக கல்வித் துறை எப்போது உணரப்போகிறது?
