PUBLISHED ON : அக் 07, 2026 12:00 AM
மா.மனோகரன், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: சென்னை போரூரை அடுத்துள்ள மதனந்தபுரத்தைச் சேர்ந்த, 6 வயது சிறுமி, 2017-ல் பக்கத்து வீட்டில் வசித்த தஷ்வந்த் என்ற வாலிபனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். சிறையில் அடைக்கப்பட்ட தஷ்வந்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
சிறையில் இருந்து வெளியே வந்த தஷ்வந்த், தன் தாயை அடித்து கொன்றுவிட்டு தலைமறைவானான்.
ஒருவழியாக அவனை கண்டுபிடித்து கைது செய்தனர், போலீசார். செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், 2018-ல் அவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேல் முறையீட்டிலும் சென்னை உயர் நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான், தஷ்வந்த். செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த துாக்கு தண்டனையை ரத்து செய்து, 2025 அக்டோபரில் தஷ்வந்தை விடுதலை செய்தது, உச்ச நீதிமன்றம். அதுமட்டுமல்ல, அவனது தாயை கொன்ற வழக்கிலும் அவனை விடுவித்தது.
கீழ் நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் படித்த சட்டப் புத்தகத்தை தானே, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் படித்து பட்டம் வாங்கி இருப்பர். அப்படியெனில் தீர்ப்புகள் மட்டும் மாறுவது ஏன்?
தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் ஏழை மக்களில் எத்தனை பேரால், ஒரு மணி நேரம் வாதடுவதற்கு லட்சக் கணக்கில் பீஸ் வாங்கும் வக்கீல்கள் நிறைந்த உச்ச நீதிமன்றத்தை நாடமுடியும்?
சமுதாயத்தில் வாழத்தகுதியற்ற மனித மிருகங்களை, சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்பிக்க விடுவதால், நீதிமன்றங்கள் மீதான நம்பகத் தன்மை போய் விடுகிறது. இதனாலேயே பழிக்கு பழி என்ற ரீதியிலான குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.
குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட பின்பே கீழ் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன.
இதில் புதிய நீதிக் கண்ணோட்டம் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டும் எப்படி வருகிறது?
ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தும் நீதிமன்றம், அதேநேரம், ஒரு குற்றவாளியை தப்பிக்க விடுவது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை மறந்து போவது ஏன்?
lll
