/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
மின் இணைப்பு பெற 8 வீடுகள் வரை கட்டட நிறைவு சான்றுக்கு விலக்கு! 'தினமலர்' செய்தி எதிரொலியால் வெளியானது அரசாணை
/
மின் இணைப்பு பெற 8 வீடுகள் வரை கட்டட நிறைவு சான்றுக்கு விலக்கு! 'தினமலர்' செய்தி எதிரொலியால் வெளியானது அரசாணை
மின் இணைப்பு பெற 8 வீடுகள் வரை கட்டட நிறைவு சான்றுக்கு விலக்கு! 'தினமலர்' செய்தி எதிரொலியால் வெளியானது அரசாணை
மின் இணைப்பு பெற 8 வீடுகள் வரை கட்டட நிறைவு சான்றுக்கு விலக்கு! 'தினமலர்' செய்தி எதிரொலியால் வெளியானது அரசாணை
PUBLISHED ON : மார் 12, 2024 12:00 AM

கோவை : மூன்று வீடுகளுக்கும் அதிகமான ஒரே கட்டடத்துக்கு மின் இணைப்புப் பெறுவதற்கு, கட்டட நிறைவுச்சான்று தேவை என்ற விதிமுறை, 'தினமலர்' செய்தி எதிரொலியால் திருத்தப்பட்டு, 8 வீடுகள் வரை விலக்கு அளித்து நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அனுமதியற்ற,விதிமீறல் கட்டடங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டதன் பேரில், கடந்த 2019ல் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் வெளியிடப்பட்டது. அதன்படி, 12 மீட்டருக்கு அதிகமான உயரம், 8072 சதுரஅடிக்கு மேற்பட்ட குடியிருப்பு, மூன்றுக்கும் அதிகமான வீடுகள் கொண்ட கட்டடத்துக்கு கட்டட நிறைவுச் சான்று அவசியம்.
அந்த சான்று இல்லாவிட்டால், மின்சாரம், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கக்கூடாது. அதே போல, சிறிய வணிகக் கட்டடத்துக்கும் இந்த சான்று இல்லாவிடில் மின் இணைப்புப் பெற முடியாது.
இந்த விதிமுறை பற்றித் தெரியாமல், கடந்த 2019 லிருந்து இப்போது வரையிலும், பல ஆயிரம் குடியிருப்புகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டு, மின் இணைப்புப் பெற முடியாமல் உள்ளன.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, வாக்குறுதி அளிக்கப்பட்டது.
கடந்த ஜன.,30ல் நடந்த 'கிரடாய்' மாநாட்டில் பேசிய அமைச்சர் முத்துசாமி, ''எட்டு வீடுகள் வரை கட்டட நிறைவுச் சான்று தேவையில்லை என்பதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.'' என்று உறுதியளித்தார்.
அமைச்சர் முத்துசாமியின் அறிவிப்பின் அடிப்படையில், மின் இணைப்பு கேட்டு, தினமும் பல ஆயிரம் பேர், மின் வாரிய அலுவலகத்துக்கு வந்து, அதிகாரிகளை 'டார்ச்சர்' செய்து கொண்டிருந்தனர்.
இதுகுறித்து, 'பல முறை அறிவித்து விட்டார் அமைச்சர்; மின்வாரிய அதிகாரிகளுக்கு டார்ச்சர்!' என்ற தலைப்பில், நமது நாளிதழில், மார்ச் 1 அன்று விரிவான செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, இதற்கான அரசாணையை உடனே வெளியிடுவதற்கு அமைச்சர் முத்துசாமி உத்தரவிட்டார்.
இதனால், இந்த விதிமுறைகளில் திருத்தங்கள் செய்து, இரண்டு அரசாணைகளை இத்துறை நேற்று வெளியிட்டது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நேற்று (மார்ச் 11) வெளியிட்ட இவ்விருஅரசாணைகளில் முதல் அரசாணையில் (எண்:69) அதிக உயரமில்லாத கட்டடங்களுக்கான அதிகபட்ச உயரத்தை 12 மீட்டரிலிருந்து 14 மீட்டராக உயர்த்தியும், அதற்கேற்ப முன்புறம் மற்றும் பின்புறம் உள்ளிட்ட பக்கத்திறவிடங்களில் மாற்றம் செய்தும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த அரசாணையில் (எண்:70), இதுவரை 750 சதுர மீட்டர் அதாவது 8072 சதுர அடி பரப்பளவுக்கு உட்பட்ட, மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட ஒரே கட்டடத்துக்கு, கட்டட நிறைவுச்சான்று அவசியம் என்ற விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதில், அதே 8072 சதுர அடி பரப்பளவுக்கு உட்பட்ட 8 வீடுகள் வரையுள்ள ஒரே கட்டடம் வரையிலும் இந்த சான்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல ஆண்டுகளாக மின் இணைப்புப் பெற முடியாத பல ஆயிரம் வீடுகள் மற்றும் கடைகளுக்கு விமோட்சனம் கிடைக்கும்.

