PUBLISHED ON : மார் 05, 2024 12:00 AM

கோவை;பழுதான அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை, உடனடியாக சரிசெய்யவும் பயணிகள் பயணிக்க முடியாத சூழலிலுள்ள, 28 பஸ்களை கழிவுக்கு அனுப்பவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பல அரசு டவுன் பஸ்கள், மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுகின்றன. பயணிகள் வேறு வழியின்றி, இது போன்ற பஸ்களில் பயணித்து, நொந்து நுாலாகின்றனர்.
பயணிகள் தெரிவித்த தொடர் புகார்களின் அடிப்படையில், இது குறித்த செய்தியும், படங்களும் 'சக்கரை சேவு' என்ற தலைப்பில், நேற்று நமது நாளிதழில் வெளியானது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டலத்தின் கீழ் உள்ள, 16 அரசு பஸ் டெப்போக்களில் இயங்கும் பஸ்கள், சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில், 28 பஸ்கள் பயணிகள் பயணிப்பதற்கு, லாயக்கற்று இருந்தன. அந்த பஸ்களை நான்கு நிலையில் உள்ள அதிகாரிகள் கொண்ட குழுவினர், சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து, அந்த பஸ்களை கழிவுக்கு (கண்டம்) அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
பழுதான நிலையில், பயணிகளுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் சூழலில் இயங்கி வந்த, மேலும் 50க்கு மேற்பட்ட பஸ்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றிலுள்ள பழுதுகளை சரிசெய்ய, அந்தந்த பணிமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேவையான உதிரிபாகங்கள் தருவிக்கப்பட்டு, பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

