/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சிலந்தி நதியின் தடுப்பணையை நிறுத்த வேண்டும்!
/
சிலந்தி நதியின் தடுப்பணையை நிறுத்த வேண்டும்!
PUBLISHED ON : மே 25, 2024 12:00 AM

சென்னை : சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுமான பணிகள் நடப்பது, 'தினமலர்' நாளிதழில் வெளியான படங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளதால், உரிய அனுமதிகள் பெறாமல் நடைபெறும் பணிகளை உடனே நிறுத்துமாறு கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பாயும் சிலந்தி ஆறு, தமிழக நதியான அமராவதியின் துணை நதியாகும். அதில் கேரள அரசு தடுப்பணை கட்டுகிறது.
இதனால், அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் வருவது நின்று போகும்; திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55,000 ஏக்கர் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள்
முறையிட்டனர்.
இந்த பிரச்னையை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல பிரிவு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த 21ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய வன உயிரின வாரியம் ஆகியவற்றிடம் கேரள அரசு உரிய அனுமதி பெற்றுள்ளதா' என தீர்ப்பாயம் கேட்டது. கேரள அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கேட்டனர். விபரங்களை சமர்ப்பிக்க, வரும் 27ம் தேதி வரை கேரள அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஆஜரான கேரள அரசின் வழக்கறிஞர், 'சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டவில்லை.
'ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், அருகில் உள்ள கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க, சிலந்தி ஆற்றின் குறுக்கே, 1 மீட்டர் உயரத்தில் தடுப்பு மட்டுமே அமைக்கப்படுகிறது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை' என்று வாதிட்டார்.
தீர்ப்பாயம் அதை ஏற்கவில்லை.
தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவது, 'தினமலர்' நாளிதழில் மே 21ல் படத்துடன் வெளியான செய்தியில் இருந்து உறுதியாகிறது. மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளில் தடுப்பணை கட்டுவது பாதிப்பை ஏற்படுத்தும். இது, தமிழகத்தில் முக்கியமான பிரச்னை. எனவேதான், தீர்ப்பாயம் இதை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
தமிழகம், கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களை உள்ளடக்கிய பிரச்னை என்பதால், தடுப்பணை கட்டுவதற்கு அனுமதி உள்பட தேவையான அனைத்தையும், கேரள அரசு, குறிப்பாக கேரள நீர்வளத்துறை உறுதி செய்ய வேண்டும். உரிய அனுமதிகள் பெறாதபட்சத்தில், தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு உடனே நிறுத்த வேண்டும்.
இது தொடர்பாக, தமிழக, கேரள அரசுகளின் தலைமை செயலர்கள், இரு மாநில நீர்வளத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணை வரும் ஜூலை, 23ல் நடக்கும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

