/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மாடித்தோட்டம் ஒரு வாழ்வியல் கலை!
/
மாடித்தோட்டம் ஒரு வாழ்வியல் கலை!
PUBLISHED ON : நவ 28, 2025 12:00 AM

மாடித்தோட்டம் வைத்திருக்கும் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வீரலட்சுமி: என் பூர்வீகம் திருநெல்வேலி. மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவில் தான் பிறந்து வளர்ந்தேன். திருமணம் ஆனதும், கணவரின் சொந்த ஊரான சென்னையில் வசிக்க ஆரம்பித்தேன். 15 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் வசித்த வீட்டை இடித்து விட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முடிவு செய்தோம்.
அதற்கான திட்டமிடலில் இறங்கும்போதே, கண்டிப்பாக மாடித்தோட்டம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கேற்ற மாதிரி கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தினோம்.
நாங்கள் நினைத்திருந்தால், இந்த இடத்திலும் குடியிருப்புகள் கட்டி, வருமானம் பார்த்திருக்க முடியும். பணம் சம்பாதிப்பது மட்டும் வாழ்க்கை இல்லை. மனதிற்கு பிடித்த மாதிரி இயற்கை சூழலில் வாழ்வதே கொடுப்பினை!
மாடித்தோட்டம் அமைக்க முடிவு செய்ததும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் நடத்திய பயிற்சி களில் பங்கேற்றேன். ஆறு மாத அஞ்சல்வழி கல்வி வாயிலாக தோட்டக்கலை படிப்பு முடித்தேன்.
பொதுவாக, மாடித்தோட்டம் அமைப்போர் மண் தொட்டி, சிமென்ட் தொட்டி அல்லது தாவர வளர்ப்பு பைகளில் செடிகள் வளர்ப்பது தான் வழக்கம்.
ஆனால், நான் பயன்படுத்துவது இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் நீளமான பிளாஸ்டிக் தொட்டிகள்; 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 6 அங்குலம் உயரம் கொண்ட ஒரு தொட்டியின் விலை, 750 ரூபாய். மாடித்தோட்டத்திற்கு ஏற்றது; ஒரு தொட்டியில் 10 செடிகள் வரை வளர்க்கலாம்.
இங்கு விளையக்கூடிய காய்கறிகள், பழங்கள், கீரைகள், மூலிகைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், எங்கள் வீட்டு தேவைக்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கிறேன்.
மாடித்தோட்டம் மனதிற்கு பிடித்த விஷயமாக இருந்தாலும், நிறைய உழைப்பையும் கொடுக்க வேண்டி இருக்கிறது. 2,000 சதுர அடி பரப்பில் செடி, கொடிகள் வளர்ப்பது சிறிது சவாலான விஷயம் தான்.
தண்ணீர் பாய்ச்சுவது, தொட்டிகளில் முளைக்கக் கூடிய களைகளை அகற்றுவது மற்றும் செடிகளில் தேவையற்ற பக்கக் கிளைகள், குருத்துகளை வெட்டும் பணிகள் தொடர்ந்து இருக்கும்.
இவற்றையெல்லாம் முறையாக செய்தால் தான், மாடித்தோட்டத்தை நீண்ட காலத்திற்கு வெற்றிகரமாக பராமரித்து காய்கறிகள், பழங்களை பெற முடியும்.
நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ, ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் மாடித்தோட்டம் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை மாடித்தோட்டம் என்பது பொழுதுபோக்கு அல்ல; வாழ்வியல் கலை!
தொடர்புக்கு:
97107 49492

