/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சூழல் தானாக மாறாது; நாம் தான் மாற்ற வேண்டும்!
/
சூழல் தானாக மாறாது; நாம் தான் மாற்ற வேண்டும்!
PUBLISHED ON : நவ 18, 2025 12:00 AM

'ஸ்ரீ லட்சுமி பால் நிலையம்' வாயிலாக பால் விற்பனை செய்து வரும், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கிஷோர்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பக்கத்தில் உள்ள, சின்னமோசூர் கிராமம் தான் எங்களுக்கு பூர்வீகம். எங்களுக்கு சொந்தமாக, 4 ஏக்கர் நிலம் இருந்தது. அப்பா நெல் சாகுபடி செய்து வந்தார்.
விவசாயிகள் எவ்வளவு உழைத்தாலும், அவர்கள் வயிறு நிறையாது என்ற சூழல் தான் எங்களுக்கும் இருந்தது. பொருளாதார நெருக்கடி அதிகமானதால், அப்பா பால், தயிர் வாங்கி விற்பனை செய்து வந்தார்.
பின், அரக்கோணத்தில் இருந்து சென்னை வந்து, வியாசர்பாடியில் வீடு வீடாக சென்று, பால் வியாபாரம் செய்து வந்தார்.
நானும் கல்லுாரி படிப்பிற்காக திருவள்ளூர் வந்தேன். அப்படியே அப்பாவின் பால் வியாபாரத்திலும் உதவிகள் செய்ய ஆரம்பித்தேன். அப்போது, பலருக்கும் பசும்பால் தேவை இருப்பது தெரிந்தது.
எங்கள் ஊரில் மாடுகள் வைத்திருப்போரிடம் பேசினோம். 'லிட்டருக்கு 32 ரூபாய் தருகிறோம்' என்று கூறியதால், பலரும் எங்களுடன் கைகோர்த்தனர்.
அதிகாலை 5:00 மணிக்கெல்லாம் அரக்கோணத்தில் இருந்து பால் டின்கள் சென்னைக்கு வந்துவிடும்; நானும், அப்பாவும் வீடு வீடாகச் சென்று பால் விற்பனை செய்வோம். 'பால் கொஞ்சம் சீக்கிரமாக கிடைத்தால் நல்லா இருக்கும்' என வாடிக்கையாளர்கள் கூறினர்.
அதனால், வாடகைக்கு ஒரு கடை எடுத்தோம். காலை 5:00 முதல் 9:00 மணி வரையும், மாலை 5:30 முதல் இரவு 10:00 மணி வரையும் கடையில் பால் வியாபாரம் நடக்கும்.
அப்பா, ஊரில் விவசாயிகளை ஒருங்கிணைத்து கொடுக்க, நான் சென்னையில் கடையை பார்த்துக் கொள்கிறேன். காலை 8:00 மணி வரை கடையில் இருப்பேன். இரண்டு மணி நேரம் மட்டும் கடையை கவனித்துக் கொள்ள ஆள் போட்டுள்ளோம்.
அதேமாதிரி, மாலையில் கல்லுாரி விட்டு வந்ததும், மறுபடி வியாபாரத்தை பார்ப்பேன். வேலை எல்லாம் முடித்து விட்டு தான் படிப்பேன்.
தினமும், 200 லிட்டர் வரை பால் வியாபாரம் நடக்கிறது. சில நாட்கள் பால் மீதமாகி விடும். அதை காய்ச்சி தயிர், மோர், பனீர் என மதிப்பு கூட்டி விற்பனை செய்து விடுவோம்.
ஒரு காலத்தில் பஸ்சுக்கு காசு இல்லாமல் இருந்த நான், இப்போது மாதம், 2 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்கிறேன்.
'நான் வியாபாரம் செய்ய போகிறேன்' என்று கூறியதும், பலரிடமும் இருந்து விமர்சனங்கள் வந்தன. ஆனாலும், என் மேல் இருந்த நம்பிக்கையில் துணிந்து இறங்கினேன்.
சூழல் தானாக மாறும் என காத்துக் கொண்டிருந்தால் எதுவும் மாறிவிடாது. அதை மாற்ற நாம் தான் முயற்சி செய்ய வேண்டும். என் முயற்சி தான் முன்னேற்றமாக மாறியுள்ளது.

