PUBLISHED ON : ஆக 20, 2024 12:00 AM

மத்திய ராணுவ துறை அமைச்சர்ராஜ்நாத் சிங்: கருணாநிதியின் பொது நல தொண்டால் நாட்டிற்கே நன்மை ஏற்பட்டுள்ளது. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக, தி.மு.க.,வை வளர்த்தவர். கூட்டாட்சி தத்துவத்திற்கு பாடுபட்டவர்; நாட்டு நலனுக்காக குரல் கொடுத்தவர். பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவை பேணி வந்தார். வாஜ்பாய் அரசில், பா.ஜ., உடன் தி.மு.க., கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம் பெற்றது.
டவுட் தனபாலு: கருணாநிதியுடன் கொண்ட தனிப்பட்ட நட்பால், அவரது நாணயத்தை வெளியிட்டு அவரை புகழ்ந்தாலும், வாஜ்பாய் ஆட்சிக்கு ஆதரவுகொடுத்ததை குறிப்பிட்டு, நாளைக்கே மோடிக்கும் ஆதரவு தேவைப்பட்டால், 'கருணாநிதி வழியை பின்பற்றுங்க'ன்னு அவரது மகன் ஸ்டாலினுக்கு சொல்லி வைக்குறீங்களோ என்ற, 'டவுட்' வருது!
அ.தி.மு.க., பொதுச் செயலர்பழனிசாமி: 'கவர்னர் தேநீர் விருந்தில் தி.மு.க., பங்கேற்காது' என்றார் ஆர்.எஸ்.பாரதி. பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாக கூறி, தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு தெரிவித்தார். இதையடுத்து, கவர்னர் தேநீர் விருந்தில் ஸ்டாலின் பங்கேற்றார். கருணாநிதி நாணயத்தை ஏன் ராகுலை வைத்து வெளியிடவில்லை?
டவுட் தனபாலு: அ.தி.மு.க., - பா.ஜ., கள்ள உறவு பிரசாரத்தை இத்தோடு முறியடித்து, பா.ஜ., வோடு தி.மு.க.,வை கோர்த்து விடுறதும் இல்லாம, காங்கிரஸ் கட்சியை உசுப்பேத்த ராகுலையும் உள்ளே இழுக்குறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: திருச்சி எஸ்.பி., வருண்குமார் மீதான அவதுாறு கருத்துக்கும், எனக்கும் தொடர்பில்லை. அவர் குறித்து வலைதளத்தில் ஆபாசமாக எழுதியவர்களை, கட்சியில் இருந்து நீக்கியுள்ளேன். என்னை, என் குடும்பத்தாரை, என் கட்சி பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர். வலைதளத்தில் ஆபாசமாக எழுதியதை நான் கடந்து செல்கிறேன். வருண்குமார், அவரது ஆதரவாளர்கள் இந்த வேலையை செய்தனர் என, என்னாலும் சொல்ல முடியும்; ஆனால், அதை நான் செய்ய தயாராக இல்லை.
டவுட் தனபாலு: உங்களை மாதிரி கடந்து போக அவர் என்ன அரசியல்வாதியா...? ஐ.பி.எஸ்., அதிகாரி, தன் மீது அவதுாறு பரப்பியவர்களை அவ்வளவு ஈசியா விட மாட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!

