PUBLISHED ON : ஆக 02, 2024 12:00 AM

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்: சிவகாசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணபேரியில், ஜக்கம்மா தேவி கோவிலுக்கு சொந்தமான, 4 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை ஜக்கம்மா அறக்கட்டளை என்ற பெயரில் போலியாக பட்டா மாற்றம் செய்துள்ளனர். இதில், கோர்ட் உத்தரவை செயல்படுத்த அறநிலைய துறையினர் தவறிஉள்ளனர். முறைகேட்டுக்கு துணைபோன, அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: துறை ரீதியில், 'மெமோ' குடுப்பாங்க, மிஞ்சி, மிஞ்சி போனா, 'சஸ்பெண்ட்' பண்ணுவாங்க... ஆனா, 4 கோடி இடத்தை கைமாத்தி விட்ட அதிகாரிகள், அதுக்கேற்ற, 'வெகுமதி'யை வாங்கியிருப்பாங்க என்பதால், இந்த நடவடிக்கைக்கு எல்லாம் அசரவே மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, 'என் மகனோ, மருமகனோ, குடும்பத்தில் இருக்கும் வேறு யாரோ அரசியலுக்கு வரமாட்டார்கள்' என உறுதி கூறினார். ஆனால், உதயநிதியை அரசியலுக்கு கொண்டு வந்து, கட்சியின் இளைஞர் அணி செயலராக்கினார். பின், எம்.எல்.ஏ.,வாக்கினார், அடுத்து அமைச்சர் ஆக்கினார். இப்போது துணை முதல்வராக்க பார்க்கிறார். இப்படி முதல்வர் பேச்சில் ஆயிரம் முரண்பாடுகள் உண்டு.
டவுட் தனபாலு: முதல்வர் இதை மட்டுமா சொன்னாரு... 'கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்க விட மாட்டேன்'னு கூடத்தான் சொன்னாரு... அதை இன்னும் ஏன் நிறைவேற்றலைன்னு உங்க கட்சியினர் யாருமே கேட்காதது ஏன் என்ற, 'டவுட்' எழுதே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: கடந்த மூன்று ஆண்டுகளில் என் மீது, 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எல்லாமே அரசியல் சார்ந்த வழக்குகள். கரூரைச் சேர்ந்த தி.மு.க.,காரர் ஒருவரின் துாண்டுதலின்படி தான், பொய்யாக வழக்கு போட்டு உள்ளனர். அவர் யாராக இருப்பார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
டவுட் தனபாலு: நீங்க, செந்தில் பாலாஜியை தானே சொல்றீங்க... 'ஆளுங்கட்சியில இருக்கிற நானே, ஒரு வருஷம் தாண்டியும், 'உள்ள' இருக்கேன்... எதிர்க்கட்சி மாஜி அமைச்சர் மட்டும் வெளியில சுதந்திரமா சுத்திட்டு இருக்காரே'ன்னு யோசனை பண்ணியிருப்பாரோ என்ற, 'டவுட்'தான் வருது!