PUBLISHED ON : மார் 04, 2026 01:35 AM

கொள்கை குறித்து பேசலாமா?
டி.ஈஸ்வரன்,
சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க.,வில்
கோலோச்சியவர்கள் பலர், அங்கிருந்து விலகி தற்போது தி.மு.க.,வில் இணைந்து,
'தாய் கழகத்தில் இணைந்து விட்டோம்' என்கின்றனர். இதைத்தான் முன்னாள்
முதல்வர் பன்னீர்செல்வமும் சொல்கிறார்.
தேனியில் தேநீர் கடை
வைத்து, அதில் டீ மாஸ்டராக இருந்த இவருக்கு அமைச்சர், துணை முதல்வர்,
மூன்று முறை முதல்வர் என பதவிகளை வாரி வழங்கிய அ.தி.மு.க., உண்மையான தாய்
கழகமாக தெரியவில்லை; ஆனால், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவால் தீயசக்தி என்று
வர்ணிக்கப்பட்ட தி.மு.க., தாய் கழகமாக தெரிகிறது.
அவ்வளவு பெரிய கொள்கைவாதி என்றால், உண்மையான தாய் கழகமான தி.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டிருக்க வேண்டியது தானே!
அண்ணாதுரை தி.மு.க.,வை ஆரம்பித்த போது, அவருக்கு உதவியவர்கள்
நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.என்.நடராஜன், ஈ.வி.கே.சம்பத்
ஆகியோர்தான். இதில், கருணாநிதி பெயரே இடம்பெறவில்லை.
கடந்த 1967ல்
அண்ணாதுரை தலைமையில், தி.மு.க.,வின் முதல் அமைச்சரவையில் கூட கருணாநிதியை
நான்காவது இடத்தில் தான் அமர வைத்தனர். ஆட்சியிலும், கட்சியிலும்
கருணாநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
எம்.ஜி.ஆர்.,
1972ல் அ.தி.மு.க.,வை ஆரம்பித்தபோது, 'அண்ணாதுரையோடு தி.மு.க., மறைந்து
விட்டது; இப்போது கருணாநிதியின் குடும்ப கட்சியாக தி.மு.க., மாறிவிட்டது.
அண்ணாதுரையின் கொள்கைகளை குழிதோண்டி புதைத்து விட்டனர். எனவே,
அண்ணாதுரையின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட அ.தி.மு.க., தான் உண்மையான தாய்
கழகம்' என்றார்.
அ.தி.மு.க.,வில் மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்திற்கு இது தெரியாதோ!
குடும்ப ஆட்சி இல்லாமல், அண்ணாதுரை கொள்கையின்படி கட்சி தொண்டர்களால் ஆளப்பட்டு வரும் அ.தி.மு.க., அல்லவா உண்மையான தாய் கழகம்.
எங்கோ ஒரு மூலையில் இருந்த பன்னீர்செல்வத்தை, தமிழக வரலாற்றில் இடம் பெறச்
செய்து உச்சத்தில் வைத்த அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை
துாக்கியெறிந்து விட்டு, இன்று தன் வீட்டில் உதயசூரியனை வைத்து விட்டார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் விசுவாசி என்று தன்னை கூறிக்கொண்டவர் இன்று
அவர்களது படங்களை அகற்றி, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி படத்தை மாட்டி,
தன் விசுவாசத்தை இடமாற்றிக் கொண்டுள்ளார்.
அ.தி.மு.க.,வில்
பன்னீர்செல்வத்துக்கு மட்டும் இடமில்லை என்று அக்கட்சி பொதுச்செயலர்
பழனிசாமி ஏன் பிடிவாதமாக இருந்தார் என்பது இப்போது தான் புரிகிறது.
இதில், சமீபத்தில் மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக பிரசார பொதுக்கூட்ட
மேடையில், ஈ.வெ.ராமசாமியின் படத்தை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்
துள்ளார், பன்னீர்செல்வம்.-
அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு?
பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் ஈ.வெ.ராமசாமியின் புகைப் படத்தை எதற்கு வைக்க வேண்டும்?
இந்த கடைக்கு போனால் எவ்வளவு லாபம் கிடைக்கும், அந்தக் கடைக்கு போனால்
என்ன லாபம் கிடைக்கும் என்று லாபக்கணக்கு போட்டு, சுயநலத்திற்காக கட்சி
தாவும் பன்னீர்செல்வம் போன்றோர் கொள்கை குறித்து பேசலாமா?
கேள்விக்கு பதிலென்ன? ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சீக்கியர்களை நாங்கள் அவமதித்து விட்டதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், எங்கள் ஆட்சியில்தான் மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும், பிரதமராகவும் பதவி வகித்தார்.
'மோடி அரசு பார்லிமென்ட்டை ஜனநாயக முறைப்படி நடத்த விரும்பவில்லை. 'எப்ஸ்டீன்' கோப்புகளில் தன் பெயரையும் தொடர்புபடுத்தி தகவல் வெளியானதால், பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பிடம் சரணடைந்து விட்டார்' என்று கூறியுள்ளார், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
கடந்த 1984-ல் முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டில்லி மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த வன்முறையில், 3,000-த்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
இக்கலவரங்கள் அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இன்றும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். மேலும், பல குற்றவாளிகள் இன்றுவரை தண்டிக்கப்படவும் இல்லை.
இதில், எங்கள் ஆட்சியில் தான் சீக்கியரான மன்மோன் சிங்கை பிரதமராக்கியுள்ளோம் என்று பெருமை பேசுகிறார், கார்கே!
பிரதமர் ஆக்கியது சரி; அவரை சுயமாக செயல்பட விட்டார்களா?
மிகச் சிறந்த பொருளாதார நிபுணரை பெயருக்கு பிரதமராக்கி, அதிகாரத்தை தன் கையில் வைத்து கொண்டு, அவரை ஆட்டிப் படைத்தவர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் தாயார் சோனியா.
'தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்' என்பதற்கிணங்க தான், ராகுலின் அரசியல் செயல்பாடுகள் உள்ளன.
மோடியை தேர்தலில் வெல்ல முடியாததால், மோடிக்கு எதிராக பொய் கதைகளை புனைந்து, கலவரத்தை துாண்டி, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் ஏற்பட்டது போல் புரட்சியை ஏற்படுத்தி, அதன் வாயிலாக ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடிக்கிறார், ராகுல்.
அதற்காக, பல நாடகங்களை பார்லிமென்டில் அரங்கேற்றி விட்டார்; தற்போது, அவர் அரங்கேற்ற துடிக்கும் புது நாடகம் தான் எப்ஸ்டீன்!
அதனால் தான், '2017-ல் என் ஆலோசனை பெற்றுதான் இஸ்ரேலுக்குச் சென்ற மோடி, அங்கு ஆடிப் பாடினார்' என்று, சிறுமியரை வைத்து பாலியல் தொழில் செய்த குற்றவாளியான எப்ஸ்டீன் கருத்துக்கு தாளம் போடுகிறார், ராகுல்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், 'எப்ஸ்டீனின் மின்னஞ்சலில் உள்ள தகவல்கள், ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியின் வெற்றுப் பிதற்றல்களே தவிர வேறொன்றுமில்லை' என்று கூறிவிட்டது.
ஆனாலும், ராகுல் அதை வேதவாக்காக எடுத்துக்கொள்வது ஏன்?
காங்., ஆட்சியின்போது, 4.82 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஊழல்கள், மோசடிகள் நடந்துள்ளதாக, 'காங்கிரஸ் பைல்ஸ்' என்ற பெயரில், பா.ஜ., வெளியிட்ட, 'வீடியோ'விற்கு பதில் சொல்ல முடியாமல், எவனோ ஒரு பாலியல் குற்றவாளி போற போக்கில் சொன்ன வார்த்தையை எடுத்துக்கொண்டு பேச வருவது ஏன்?
ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி கேட்க மட்டுமல்ல; கேள்விக்கு பதில் அளிக்கும் கடமையும் உண்டு என்பதை கார்கே உணர வேண்டும்!

