தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ தாழியை எட்டி உதைத்த பா.ஜ.,!

 தாழியை எட்டி உதைத்த பா.ஜ.,!

 தாழியை எட்டி உதைத்த பா.ஜ.,!

1


PUBLISHED ON : ஜூலை 04, 2026 12:19 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2026 12:19 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.சுப்பிரமணி, புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இருந்தபோது, பட்டி தொட்டியெங்கும் நடந்து கட்சியை பலப்படுத்தி வைத்திருந்தார்; அவரும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக இருந்தார்.

அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து நீக்காமல், அவரையே முதல்வராக முன்னிலைப்படுத்தி, தனித்து போட்டியிட்டிருந்தால், அதிக எம்.எல்.ஏ.,க்களை பெற்றிருக்கும் பா.ஜ.,

நல்லதொரு வாய்ப்பை நழுவ விட்டு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் சொல் கேட்டு, அதள பாதாளத்தில் விழுந்து விட்டது, பா.ஜ.,

தற்போது பா.ஜ.,வில் இருந்து விலகி, 'வீ தி லீடர்' அமைப்பை துவங்கியுள்ள அண்ணாமலையை, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் போனில் தொடர்பு கொண்டு, மீண்டும் பா.ஜ.,வுக்கு திரும்ப, அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஆனால், அண்ணாமலையோ, 'இனி திரும்பி வர முடியாது; நல்லதோ, கெட்டதோ இப்படியே பயணிக்கிறேன்' என்று மறுப்பு தெரிவித்து விட்டாராம்!

அண்ணாமலையை கட்சியிலிருந்து நீக்கியபோது, மக்கள் வேதனை அடைந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. இப்போது அவரின் இயக்கத்தைப் பார்த்து, அவர்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர். பார்ப்போம், தமிழகத்தின் எதிர்காலம் யார் கையில் என்று!

போலீசார் துரிதமாக செயல்பட வேண்டும்!


எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட் டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

காவல் துறையினரும் மக்கள் இழந்த நகைகளை முழுதுமாக மீட்டுக் கொடுப்பதில்லை. உதாரணத்திற்கு, 50 சவரன் நகை திருடு போயிருந்தால், திருடர்களிடம் இருந்து காவல் துறையினர் மீட்பது, 40 அல்லது 45 சவரன் நகை மட்டுமே!

மீதமுள்ள நகையை திருடியவர் வேறு எவரிடமாவது கொடுத்திருக்க வேண்டும் அல்லது விற்கவோ, அடமானமோ வைத்திருக்க வேண்டும்.

போலீசார் நினைத்தால் நகையை முழுமையாக மீட்க முடியும். ஆனால், காவல் துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் தங்கள் சுயநலத்திற்காக, அதில், சிறு பகுதியை தங்கள் வசம் வைத்துக்கொண்டு, மீதமுள்ள நகையை கணக்கில் காண்பிக்கின்றனர்.

பறி கொடுத்தவர்களும் இந்த அளவாவது கிடைத்ததே என்று நினைக்கின்றனர்.

மக்களின் இந்த மனநிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் போலீசார், வழக்கு முடிந்தவுடன், தாங்கள் கைப்பற்றி வைத்துள்ள நகையை விற்று, அப்பணத்தை பங்கு போட்டுக் கொள்கின்றனர்.

முன்பு தங்கம் விலை குறைவாக இருந்தது; களவு கொடுத்தவர்கள் வேறு வழியின்றி போலீசார் கொடுத்ததை பெற்றுக் கொண்டனர். ஆனால், தற்போது தங்கத்தின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.

நடுத்தர குடும்பத்தினரால் ஒரு கிராம் தங்கம் வாங்குவதே சிரமமாக இருக்கும் நிலையில், போலீசார் மீட்டு கொடுக்கும் நகையில், இதுபோன்று ஒரு சவரன், இரண்டு சவரன் என்று குறைத்துக் கொடுப்பது களவு கொடுத்தவர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, களவு கொடுத்தவர்கள் புகார் கொடுத்த உடனேயே, போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டால், களவாடியவனையும் பிடித்து விடலாம்; களவு கொடுத்தவர்களும் நஷ்டத்திலிருந்து மீள்வர். இப்போது, தெருவுக்குத் தெரு, 'சிசிடிவி' கேமராக்கள் உள்ளதே!

போலீசாருக்கு சிரமம் ஏதும் இருக்காதே!

உரிமையை இழப்பர்!


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹிந்து மதத்தில் உள்ளது போல், கிறிஸ்துவ - இஸ்லாமிய மதங்களில் ஜாதி பாகுபாடுகள் கிடையாது; அனைவரும் சமம் என்ற பொய்யைக் கூறி, அப்பாவி ஹிந்துக்கள் மூளை சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றம் செய்யப் படுகின்றனர்.

அவ்வகையில், ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர், தனக்கு பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் சான்றிதழ் வேண்டி, வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'ஹிந்து மதத்தில் எப்படி பிறப்பால் ஒருவர் ஜாதிய அடையாளத்தை பெறுகிறாரோ, அதைப் போலவே இஸ்லாமிய சமூகத்திலும் பிறப்பால் மட்டுமே ஒருவர் ராவுத்தர், மரைக்காயர், தெக்கானி முஸ்லிம் என்ற அடையாளத்தை பெறுகின்றனர்.

'ஒரு மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள், இஸ்லாமியர்களாகத் தான் கருதப்படுவரே தவிர, அவர்களை ராவுத்தர் முஸ்லிம், மரைக்காயர் முஸ்லிம் என்று மாற்றுவது அபத்தம்.

'எனவே, ஹிந்து மதத்திலிருந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள், இஸ்லாம் மதத்திற்கு மாறினால், அவர்களை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தினராக கருதி, அவர்கள் இடஒதுக்கீடு சலுகைகளை பெறலாம் என்ற தமிழக அரசின் உத்தரவு சட்ட விரோதமானது; அரசியல் சாசனத்திற்கு முரணானது' என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்துள்ளது, நீதிமன்றம்.

இத்தீர்ப்பு, மத மாற்றத்தை ஓரளவு கட்டுப்படுத்தும் என்று நம்புவோம்.

ஏற்கனவே, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு, 3.5 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதை, ஐந்து சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, ஒருபுறம் இஸ்லாமிய அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன. மறுபுறம், ஜாதி, மதங்களை வைத்து ஓட்டு வங்கி அரசியல் செய்து வரும் அரசியல் கட்சிகள், மதம் மாறிய பின்பும், அவர்கள் முன்பு அனுபவித்த இடஒதுக்கீடு சலுகைகள் தொடர வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.

அதேநேரம், மதமாற்ற தடை சட்டத்தையும், பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளோருக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள, 10 சதவீத இடஒதுக்கீடு சலுகைகளை அமல்படுத்த எதிர்க்கின்றன.

சிறுபான்மையினர் நலனுக்காக மட்டுமே செயல்பட்டுவரும், மத மாற்றத்தை ஊக்குவிக்கும், பெரும்பான்மையினர் விரோத கட்சிகளுக்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்டாத வரை, பெரும்பான்மை மக்கள் தங்கள் உரிமைகளை இழந்தபடி தான் இருப்பர்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us