தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ வைகோ பதில் கூறுவாரா?

 வைகோ பதில் கூறுவாரா?

 வைகோ பதில் கூறுவாரா?


PUBLISHED ON : ஜூலை 03, 2026 12:29 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2026 12:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.கந்தசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே, சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ, சீமை கருவேல மரத்தால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, மண்ணின் வளம் பாதிக்கப்படுவது பற்றி பேசவில்லை. மாறாக, தி.மு.க., எப்படி ஊழல் செய்தது என்பது குறித்து மக்களுக்கு பாடம் நடத்தியுள்ளார்.

தி.மு.க., ஆட்சியில் சதுர அடிக்கு இவ்வளவு என நிர்ணயித்து, கட்டுமான அனுமதிக்கு ஊழல் நடந்தது என்றும், 'மொத்தத்தில், ஐந்தாண்டு கால ஆட்சியில், 'கலெக் ஷன், கமிஷன், கரப்ஷன்' தான் நடந்தது; இதையெல்லாம் நான் ஏன் முன்பே பேசவில்லை என்றால், கூட்டணியில் இருந்து கொண்டே, தி.மு.க.,வை எதிர்த்து பேச முடியாது; அப்படி பேசினால், அது அயோக்கியத்தனமாக இருக்கும்' என்றும் கூறியுள்ளார், வைகோ.

கூட்டணியில் இருந்து கொண்டு, தி.மு.க.,வை எதிர்த்து பேசுவது அயோக்கியத்தனம் என்றால், கூட்டணி சேர்ந்து மக்களுக்கு பலவாறாக வாக்குறுதி கொடுத்து ஓட்டுகளை பெற்று, வெற்றி பெற்ற பின், தங்கள் சுயலாபத்திற்காக அந்த வெற்றியை உதறி விட்டு, வேறு கட்சியில் இணைந்து, அதே மக்களிடம் ஓட்டுக் கேட்டு வருவதற்கு பெயர் உத்தமத்தனமா?

கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சியில், 'கலெக் ஷன், கமிஷன், கரப்ஷன்' தான் நடந்துள்ளது என்று, கூடாரத்தை காலி செய்த பின் இப்போது கூறுகிறார்.

தி.மு.க., ஊழல் கட்சி என்பது, அக்கட்சியுடன் கூட்டணி வைத்த போது வைகோவிற்கு தெரியாதா? அக்கட்சி மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கிறது; மக்களை சுரண்டிக் கொழுக்கிறது என்று தெரிந்தும், 'எந்த மாநிலங்களிலும் இல்லாத திட்டங்களை, தமிழகத்தில் நிறைவேற்றி வரும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும்...' என்று கூட்டணியில் இருந்த போது கூறியது, மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

கூட்டணியால் லாபம் என்றால், அயோக்கியர்கள் எல்லாம் உத்தமர்களாகி விடுவதும்; அதுவே எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால், அவர்களே மகா அயோக்கியர்களாவதும் எப்படி?

வைகோ பதில் கூறுவாரா?

கொள்கையாளர்கள் அல்ல; கொள்ளையர்கள்!


எஸ்.ஆர்.சுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொள்கை இல்லாதவர்கள் தான் கட்சியை விட்டு போகின்றனர்; கொள்கை உள்ளவர்கள் கட்சியில் நீடித்து இருக்கின்றனர். அ.தி.மு.க., மேடைப் பேச்சாளர் நடிகை விந்தியா, கடந்த 20 ஆண்டுகளாக, தி.மு.க.,வை மேடைகளில் விளாசி வருகிறார். அவரைப் போன்ற தீவிர விசுவாசிகளுக்கு அ.தி.மு.க.,வில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் மகன் மிதுனை கட்சியில் இணைத்து, கட்சியை படுகுழியில் தள்ள நினைக்கின்றனர்.

'பழனிசாமியின் மகன் கட்சிக்காக என்ன தியாகத்தை செய்து விட்டார் என்று, காஞ்சிபுரத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் மிதுனின் பெயரை துணை பொதுச்செயலர் முனுசாமி முன் மொழிந்தார்?' என்று, இப்பகுதியில் வாசகர் ஒருவர் விளாசியுள்ளார்.

அ.தி.மு.க., கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது; கூடாரம் காலியாகி, தன் பதவியும் பறி போய்விட்டால், கட்சியின் பெயரில் குவித்து வைத்துள்ள கோடிகள் கேட்பார் இன்றி போய்விடுமே என்று எண்ணுகிறார், பழனிசாமி.

அதனால், சொத்துக்களை காப்பாற்றவும், கைப்பற்றவும் முனுசாமி வாயிலாக காய் நகர்த்தியுள்ளார். இன்னும் ஒருசில மாதங்களில் தன் மகன் மிதுனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை கொடுத்து, தி.மு.க.,வைப் போல் அ.தி.மு.க.,வையும் குடும்ப கட்சியாக்கி விடுவார் பழனிசாமி.

இதில் கொள்கை எங்கே இருக்கிறது?

அவ்வையார் இயற்றிய மூதுரையில் ஒரு பாடல் வரும்... 'அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர்; - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே, ஒட்டி உறுவார் உறவு' என்று!

இதற்கு அர்த்தம், நீர் நிறைந்த குளத்தில் தங்கி, மீன்களை உண்டு வாழும் பறவைகள், நீர் வற்றியவுடன் அக்குளத்தை விட்டுப் பறந்து போய்விடும். ஆனால், நீர் வற்றிய குளத்தில் வாழும் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற தாவரங்கள் குளம் வறண்டாலும், அங்கேயே நிலைத்திருந்து, குளத்திற்கு ஆதரவாக இருக்கின்றன.

அதுபோல், இன்பத்திலும், துன்பத்திலும்நம்மை பிரியாமல் நம்மோடு ஒட்டி உறுதியாக நிற்பவர்களே, உண்மையான உறவுகள் என்கிறார், அவ்வையார்.

அற்ற குளத்தின் அறுநீர் பறவைகள் போல், கட்சி பதவிகளில் அமர்ந்து உண்டு கொழுத்த இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்கள் தான் கட்சிமாறி செல்கின்றனரே தவிர, தொண்டர்கள் விலகி செல்வதில்லை.

இதை புரிந்து கொள்ள எந்த தலைவரும் விரும்புவதில்லை; புரிந்து நடந்தால் கொள்ளையடிக்க முடியாதே!

இன்னும் எத்தனை அணுகுண்டோ

!

ரா.சேது ராமானுஜம், விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளால், தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள், அண்டை மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன' என்று, ஒரு கண்ணி வெடியை கொளுத்தி போட்டது, தி.மு.க.,

அதற்கு பதிலடியாக, ஓர் அணுகுண்டை வீசியுள்ளார், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா.

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது, வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டு தொழில் முதலீடுகள், எந்தெந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளன; அதனால், தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு, எத்தனை லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளன என்பதை, புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு வர வேண்டிய, 25 முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா, மே.வங்கம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு சென்று விட்டதால், தமிழகத்திற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு, 3.3 லட்சம் கோடி ரூபாய். இதனால், 2.3 லட்சம் பேருக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் பறிபோய் உள்ளன.

கடந்த 2024- - 25ல் மட்டும் சுசிகி மோட்டார்ஸ், டாடா எலெக்ட்ரானிக்ஸ் செமி கண்டக்டர் ஆலை, ஜெ.எஸ்.டபிள்யூ குரூப்ஸ், ஏ.வி., பேட்டரிஸ், டொயோட்டா மோட்டார்ஸ், மைக்ரான் கம்ப்யூட்டர்ஸ் உட்பட பல நிறுவனங்கள் தமிழகத்தில் இருந்து வெளியேறியுள்ளன.

காரணம், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தம்பியின் ஊழல் மற்றும் லஞ்சம் தான் என்று பட்டியலிட்டு கூறியுள்ளார், அமைச்சர் கீர்த்தனா.

இப்புள்ளி விவரங் களுக்கு, தி.மு.க., தரப்பிலிருந்து எந்தவித எதிர்ப்போ, பதிலோ இதுவரை தரப்படவில்லை என்பதிலிருந்தே, இது உண்மை என்று ஊர்ஜிதமாகிறது.

இன்னும் என்னென்ன அணுகுண்டுகள் வெடிக்கப் போகிறதோ தெரியவில்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us